சி.ஐ.ஏ பயன்படுத்திய உளவுக்கருவிகள். மீண்டும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்
அமெரிக்காவுக்கே சிம்மசொப்பனாக விளங்கி வரும் விக்கிலீக்ஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பல ரகசியங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது. இதனால் அமெரிக்காவின் கடுமையான நடவடிக்கையால் விக்கிலீக்ஸ் தலைவர் நாட்டைவிட்டு வெளியேறி தப்பிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பயன்படுத்திய உளவுக்கருகள் குறித்து ஆதாரங்களுடன் வெளியிட்டு உலகையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. வால்ட் 7 என்ற பெயரில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள புதிய ஆவணங்களால் அமெரிக்கா தர்மசங்கட நிலையில் உள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலின்படி நீங்கள் வீட்டில் வைத்து பயன்படுத்தும் சாம்சங் ஸ்மார்ட் டி.வி.யினை உளவு பார்க்கும் சாதனமாக மாற்ற சிஐஏ கருவி ஒன்றை வடிவமைத்துள்ளதாகவும், சாம்சங் ஸ்மார்ட் டி.வி.க்கள் மூலமும் ரகசியங்களை அவ்வப்போது பெற்றுள்ளதகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் சிஐஏ கண்டறிந்துள்ள புதிய கருவி உங்களது ஸ்மார்ட் டிவி ஆஃப் ஆனதை போன்று காட்சியளிக்க செய்து உங்களது உரையாடல்களை பதிவு செய்யும் என்றும் இதற்கென சிஐஏ வீப்பிங் ஏஞ்செல் (Weeping Angel) என்ற மென்பொருளை அது பயன்படுத்தி வந்ததாகவும் ஆதாரத்துடன் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி ஆப்பிள் மற்றும் கூகுள் இயங்குதளங்களில் காணப்படும் பல்வேறு பிழைகளை கண்டறிந்துள்ள சிஐஏ, இந்த பிழைகளை தனக்கு சாதகமாக்கி அவற்றின் மூலம் ஏராளமான தகவல்களை சேகரித்துள்ளது. இந்த பிழைகளை சரி செய்து விட்டதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ள போதிலும் இது குறித்து கூகுள் சார்பில் இதுவரி எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..