அப்புச்சி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜோ மல்லூரியும், ஜி.எம். குமாரும் ஊர் தலைவர்கள். இவர்களது தந்தைக்கு இரண்டு மனைவிகள். மனைவிகள் இருவருக்கும் சமமான அந்தஸ்து கொடுத்து அவர்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் ஏற்படாமல் கண்ணியமாக வாழ்ந்து வருகிறார் அவர்களது தந்தை.
ஆனால், இவர்களது மகன்களான ஜோ மல்லூரியும், ஜி.எம். குமாரும் அடிக்கடி மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். தந்தையின் இறப்பிற்கு பிறகு, இருவருக்கும் இடையேயான மோதல் அதிகமாகிறது. இவர்களது மோதலால் அந்த ஊரில் ஒரு கோவில் கூட இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், ஊர் பொதுமக்கள் அனைவரும் நிம்மதி இன்றி தவிக்கின்றனர்.
இந்த நிலையில் அதே ஊரில் வசிக்கும் நாயகன் பிரவீன் குமாரும், ஜோ மல்லூரியின் உறவுக்கார பெண்ணான அனுஷாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். அதே போல், ஜோ மல்லூரியின் மகளான சுவாசிகாவும், இவரது வீட்டில் டிரைவராக பணிபுரியும் விஷ்ணு முரளியும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள்.
இப்படியிருக்கும்போது, ஒருநாள் வானில் இருந்து எரிகற்கள் பூமியை நோக்கி வருகிறது என்றும், அது 7 நாட்களில் பூமியின் மீது விழும் என்றும், அது விழுந்தால் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் என்றும் அறிவியல் துறை அதிகாரி கிட்டி கண்டுபிடிக்கிறார்.
இந்த செய்தியை டி.வி.யில் பார்க்கும் அப்புச்சி கிராமத்துக்காரர்கள் பயந்து போகிறார்கள். மறுநாள் அந்த எரிகல்லின் துண்டு ஒன்று இவர்களது கிராமத்தில் வந்து விழுகிறது. இதனால், பீதியடையும் அப்புச்சி கிராம மக்கள் எரிகல்லின் துண்டு நம்முடைய கிராமத்தில் விழுந்ததால், பெரிய கல்லும் நம்முடைய கிராமத்தில் தான் விழும் என்று நம்புகிறார்கள். இருந்தும் பீதியுடனேயே அந்த கிராமத்தில் தங்குகிறார்கள்.
இதற்கிடையே அந்த எரிகல் அவர்களது கிராமத்தில் தான் விழும் என்ற யூகத்தின் அடிப்படையில் அரசாங்கம் அங்குள்ள மக்களை வெளியேற்ற பேருந்துகளை அனுப்பி வைக்கிறது. ஆனால், மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற மறுக்கிறார்கள்.
ஊர் தலைவர்களான ஜோ மல்லூரியும், ஜி.எம்.குமாரும் தங்களது பகையை மறந்து, ஒன்றாக இணைகிறார்கள். எது நடந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து அங்கேயே தங்க முடிவெடுக்கிறார்கள்.
அடுத்த நாள் வானத்தில் இருந்து கீழே வரும் எரிகல் அப்புச்சி கிராமத்தில் விழுந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ஒரு கிராமத்தில் ஏற்படும் இயற்கை அச்சுறுத்தலையும், அதில் 6 பேரின் வாழ்க்கையையும் மையப்படுத்தி ஒரு கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த். அதை 2 மணி நேரம் சுவாரஸ்யமாகவும் படமாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.
ஊர் தலைவர்களாக வரும் ஜோ மல்லூரியும், ஜி.எம்.குமாரும் தங்களின் கனமான கதாபாத்திரத்திற்கு அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அதை மேலும் மெருகூட்டியிருக்கிறார்கள். நாயகன் பிரவீன் குமார், நாயகி அனுஷா இருவருமே காதலிக்க மட்டுமே படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
மற்றொரு ஜோடியாக வரும் விஷ்ணு முரளி, சுவாஷிகா இவர்களும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்கள். கஞ்சனாக வரும் கஞ்சா கருப்பு, சிங்கம் புலி ஆகியோர் காமெடிக்காக திணிக்கப்பட்டாலும், இவர்கள் வரும் காட்சிகள் கலகலப்பூட்டவில்லை. சுஜா வருண்ணி ஒரு சில காட்சிகளில் வந்திருப்பதுடன், ஒரு பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். மற்றபடி, அவரை படத்தில் பெரிதாக காட்டவில்லை.
அனுபவ நடிகர்களான நாசர், கிட்டி ஆகியோரை சரியாக பயன்படுத்த தவறிய இயக்குனர் மனித வாழ்க்கையில் அகம்பாவம் என்றும் நிலையானது அல்ல, அன்பு தான் என்றுமே நிலையானது என்பதை அழகாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
விஷாலின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் தான். பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜி.கே.பிரசாத் ஒளிப்பதிவில் அப்புச்சி கிராமம் அழகாக காட்சி தருகிறது.
மொத்தத்தில் ‘அப்புச்சி கிராமம்’ பொழுதை போக்கலாம்