முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி, திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 27ம் தேதி வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுலா சி.பந்த் ஆகியோர் கொண்ட 3 பேர் அமர்வு உருவாக்கப்பட்டது. இந்த அமர்வு க.அன்பழகனின் மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்திஅர்ஜுனா ஆஜரானார். அவர் வாதாடிய போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பவானிசிங் செயல்படுகிறார் என்றும் அதனால் வழக்கின் திசை மாறிவருவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன் ஆஜரானார். அவர் கூறியபோது, அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லும், அவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கு விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 27ம் தேதி வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது