‘அரண்மனை 2’ திரைவிமர்சனம்
கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை’ திரைப்படம் திகில், சஸ்பென்ஸ், பயமுறுத்தல், காமெடி மற்றும் ஆன்மீகம் கலந்த கிளைமாக்ஸ் ஆகியவை சரியான விகிதத்தில் அமைந்ததால் அனைவரையும் கவர்ந்தது. அந்த எதிர்பார்ப்போடு இந்த ‘அரண்மனை 2’ படத்திற்கு வந்தவர்களை சுந்தர் சி திருப்தி செய்தாரா? என்பதை தற்போது பார்ப்போம்.
கோவிலூர் கிராமத்தில் வாழும் அரண்மனைக்கு சொந்தக்காரர் ராதாரவி. இவரை பழி வாங்க துடிக்கும் ஒரு ஆவி அவரை அடித்து கோமாவில் தள்ளிவிட, இந்த விஷயம் தெரிந்து அங்கே வருகிறார் அவரது மகன் சித்தார்த் மற்றும் அவரது காதலி த்ரிஷா.
அரண்மனைக்கு வந்தது முதல் அவர்களுக்கு பலவகையான அமானுஷ்ய அனுபவங்கள் கிடைக்க, அந்த அரண்மனைக்குள் ஒரு ஆவி நடமாடுவதாகவும், அந்த அரண்மனையில் இருந்து உடனே எல்லோரும் வெளியேறிவிடும்படி கூறிவிட்டு அந்த வீட்டின் டிரைவர் இறந்துவிடுகிறார்.
இந்த பிரச்சனையை சரிசெய்ய வருகிறார் த்ரிஷாவின் அண்ணன் சுந்தர்சி. வந்தவுடனே ஆவி த்ரிஷாவின் உடலில்தான் இருக்கின்றது என்பதையும், அந்த ஆவி சித்தார்த்தின் இறந்து போன தங்கை ஹன்சிகாவின் ஆவி என்பதையும் கண்டுபிடித்து, அந்த ஆவியை விரட்ட அவர் செய்யும் தந்திரங்கள்தான் படத்தின் இரண்டாம் பாதி. தனது சொந்த குடும்பத்தையே பழிவாங்க ஹன்சிகாவின் ஆவி துடித்தது ஏன்? என்பதற்கு ஒரு பிளாஷ்பேக். ஹன்சிகா ஆவியை த்ரிஷாவின் உடலில் இருந்து சுந்தர் சி விரட்டினாரா? என்பதுதான் மீதிக்கதை.
சுந்தர் சியின் வழக்கமான முதல்பாதி. ஆவி வரும் ஒவ்வொரு காட்சியில் அனைவரையும் மிரள வைக்கின்றார். சித்தார்த்-த்ர்ஷாவின் கடற்கரை கிளாமர் பாடல், கோவை சரளா-சூரி-மனோபாலாவின் காமெடி, பூனம் பாஜ்வாவின் மர்ம தோற்றம், சுந்தர் சியின் சரியான எண்ட்ரி, சஸ்பென்ஸ் என அனைத்துமே கச்சிதமாக நகர்கிறது முதல்பாதி திரைக்கதை
இரண்டாவது பாதியில் பேய் ஹன்சிகாவின் நோக்கம் என்ன? அவருடைய பின்னணி என்ன என்பது தெரிந்த பின்னர் திரைக்கதை தடுமாடுகிறது. நூற்றுக்கணக்கான படங்களில் பார்த்த மலையாள நம்பூதிரி, பூஜை, ஆவியை ஏமாற்றும் காமெடி காட்சிகள் என கற்பனை வறட்சி இரண்டாம் பாதியில் தெரிகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெற்ற மகளை கெளரவத்திற்காக ஒரு தந்தையே கொல்வது என்பதெல்லாம் பழங்கால கற்பனை.
சித்தார்த்தான் இந்த படத்தின் ஹீரோ என்று டைட்டிலும் காண்பித்த போதிலும் அவருக்குரிய காட்சிகளும், கேரக்டர் அமைப்பும் பலவீனமாக உள்ளது. இருந்தாலும் முடிந்தவரை தனது கேரக்டருக்கு மெருகேற்ற முயற்சித்துள்ளார்.
முதல் பாதியில் கவர்ச்சி நாயகியாகவும், இரண்டாம் பாதியில் பேயாகவும் வரும் த்ரிஷாவுக்கு படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. இருந்தாலும் திரைக்கதையில் அழுத்தம் இல்லாததால் அவருடைய கேரக்டர் பரிதாபத்தையோ, பயத்தையோ பெற தவறிவிட்டது.
ஹன்சிகாவுக்கு நடிக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஒரு நல்ல நடிகையை சுந்தர் சி வீணடித்துள்ளார். பூனம் பாஜ்வாவை இந்த படத்தில் எதற்காக நடிக்கவைத்தார் சுந்தர் சி என்பது படம் முடிந்து வெளியே வந்தபின்பும் புரியவில்லை. கோவை சரளா – சூரியின் காமெடி ஒருசில இடங்களில் எடுபட்டுள்ளது. ஆனால் பல காட்சிகளில் சொதப்பியுள்ளது. மனோபாலா கேரக்டர் இன்னொரு வேஸ்ட் கேரக்டர்.
கிராபிக்ஸ் மற்றும் அம்மன் பாடல் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது. குஷ்புவின் அம்மன் நடனம் ஒரு சர்ப்ரைஸ். இவ்வளவு பெரிய அம்மன் சிலை, கோவில் கோபுரங்கள் செட் ஆகியவை பிரமிக்க வைக்கின்றது. அதோடு அம்மன் சிலையை கிளைமாக்ஸில் சரியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் சுந்தர் சி.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பின்னணி இசை சூப்பர். ஆனால் பாடல்கள் எதுவும் மனதை தொடவில்லை. அம்மன் பாடல் கூட காட்சிகளின் பிரமாண்டம் காரணமாகத்தான் சிறப்பாக உள்ளது.
செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ஓகே. ஆனால் எடிட்டர் ஸ்ரீகாந்த் படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் ஒரு பேய்ப்படம் என்றால் ‘மாயா’ மாதிரி ஆடியன்ஸ்களை மிரள வைக்கும் வகையில் இருக்க வேண்டும். பேய்ப்படத்தில் காமெடியை புகுத்தும் பாணியை தமிழ் சினிமா என்று கைவிடுகிறதோ அன்றுதான் ஒரு உண்மையான மிரட்டலான பேய்ப்படத்தை தமிழில் பார்க்க முடியும்.
மொத்தத்தில் ‘அரண்மனை 2’ படத்தில் பாழடைந்த பழைய அரண்மனை