அரத்தை அரு மருந்து..

ht3236

சிறுவர்கள் இருமலுடன் அவதிப்படும் போது பெரியவர்கள் ஒரு வேரையும் அதனுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சிதைத்து வாயில் அடக்கி கொள் என்பார்கள். அதை சுவைக்க காரமும் இனிப்பும் சேர்ந்து நம்மை அதை விரும்பச்செய்யும். வாயில் அடக்கி சாற்றை உள்ளுக்கு விழுங்குவது என்ன என்றே தெரியாமல் சாப்பிட்டு இருமலை போக்கிக்கொள்வோம். இன்றைக்கும் பல கிராமங்களில் இதை நாம் பார்க்க முடியும். அந்த வேருதான் அரத்தைகிழங்கு. அரத்தையானது இஞ்சி இனத்தை சேர்ந்த சிறு செடியினம். பார்ப்பதற்கு மஞ்சள் செடிபோலவே காட்சிதரும். 5 அடி உயரம் வளரும்.

குத்தாக பக்க இலைகள் விட்டு இருக்கும். அழகிய பூக்களும், சிவந்த பழங்களும் உடையது. அரத்தையின் மணம் குருமிளகு வாசனை போல் இருக்கும். கிழங்குகளுக்காக பயிரிடப்படுகிறது. கிழங்கு கடினத்தன்மை கொண்டது. இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரு இனம் உண்டு. பெரும்பாலும் கோழையகற்றவும், பசி மிகுத்தல் மருந்தாகவும் பயன்படுகிறது. நெஞ்சுக்கோழை, ஈளை, மார்புநோய், வீக்கம், பல்நோய், மார்புநோய், நாள்பட்ட ஐயம், கரப்பான், வாதசோணிதம், போக்கி பசியை உண்டாக்கும். மூட்டுவாத வீக்கம், வயிற்றுப்புண், தொண்டைப்புண் முதலியவற்றை குணப்படுத்தும்.

5 வயது முதல் 8 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு ஏற்படும் சளி மற்றும் பித்த நோய்கள், காய்ச்சல், சீதளக்காய்ச்சல் முதலியவற்றுக்கு 100கிராம் சிற்றரத்தையை பொடியாக்கி அதனுடன் 100கிராம் பனங்கற்கண்டை பொடித்து போட்டு இதில் சிறிதளவு வாயில் போட்டு சுவைத்து விழுங்கவேண்டும். அதன் பிறகு இளம் சூடான பசும்பால் 200 மிலி அருந்தினால் நோய்கள் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம், கபம், கணை முதலியவற்றுக்கு சிறிய அளவிலான சிற்றரத்தை ஆமணக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் சுட்டு கரியாக்கி அதை எடுத்து தேனில் குழைத்து மிகச்சிறிய அளவில் கொடுத்தால் உடனடி குணம் ஏற்படும்.

சிற்றரத்தைப்பொடியை 2முதல் 4கிராம் வரை தேனுடன் கலந்து கொடுத்து வந்தாலும், சிற்றரத்தையை சிதைத்து 30மிலி வெந்நீரில்போட்டு 3 மணிநேரம் கழித்து வடிகட்டி 20 மிலி முதல் 45மிலி வரை தேன்சிறிது கலந்து கொடுத்தாலும் முன்சொன்ன நோய்கள் அனைத்தும் நீங்கும். சிற்றரத்தை பொடியை 1 கிராம் அளவில் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டுவர சுரம், சளி, ஈளை, அருமல், தொண்டைப்புண், நீர்க்கோர்வை, வாயு பீனிசம் தீரும். அம்மியில் அல்லது சிமெண்ட் தரையில் இஞ்சிசாறு விட்டு அதில் சிற்றரத்தையை தேய்த்தால் அரத்தை கரைந்து மென்மையாக விழுது வரும். அதனுடன் மேலும் சிறிது இஞ்சிசாறு கலந்து சூடாக்கி தாங்கும் பதத்தில் கீழ் முதுகு தண்டுபகுதியில் வலிக்குமிடத்தில் பற்றுபோட்டால் முதுகு வலி தீரும்.

ஒரு துண்டு சிற்றரத்தையை வாயிலிட்டு சுவைத்துவர தொண்டையிற்கட்டும் கோழை வாந்தி இருமல் தணியும். அதிமதுரம், தாளிசம், திப்பிலி, சிற்றரத்தை வகைக்கு 10 கிராம் அளவில் எடுத்து அம்மியில் தண்ணீர் விட்டு அரைத்து 75மிலி தண்ணீரில் கலக்கி பொங்கிவரும்வரை அடுப்பில் வைத்து ஆறியபிறகு தேன் கலந்துசாப்பிட இருமல், கோழைகட்டு, குத்திருமல், தலைவலி, சீதளம், காய்ச்சல் முதலியவை குணமாகும். வாயுகோளாறுகள், தொடர் இருமல், அடிக்கடி ஏற்படும் தலைவலி, வாந்தி, பித்த மயக்கம், சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டால் சிற்றரத்தை எடுத்து நசுக்கி 15கிராம் அளவு எடுத்து கொள்ளவேண்டும். 200மிலி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து ஆறியபிறகு வடிக்கட்டி அதனுடன் 50கிராம் கற்கண்டை பொடித்து போட்டு 50மிலி அளவில் குடித்து வந்தால் நோய் தீரும்.

அழலோடு உண்டாகும் கோழைகளுக்கு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவேண்டும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கப, வாயு பித்த நோய்கள் அனைத்திற்கும் சிற்றரத்தையை சுட்டு தேனில் இழைத்து தாய்பாலில் கலந்து கொடுக்கவேண்டும். 

இதேபோல் பேரரத்தையும் மருத்துவ குணம் வாய்ந்ததுதான். வளிநோய், உடல்வலி, புறவலி, அழலைப்பற்றி ஐயசுரம், தலையேற்றம், சூதகவலி, நஞ்சுகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. இதைத்தான் என்கின்றார் அகத்தியர். என்ன செடி என்று தெரியாமல் இதுவும் ஒரு செடி என்று எண்ணி அதை பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கும் நாம். நாம் வாழும் இடங்களில் செழித்து வளர்ந்து இருக்கும் மூலிகளைகளை அறிந்து முன்னோர் சொல்லி சென்ற வழியில் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

Leave a Reply