மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசுக்கு அரவிந்தசாமி ஆலோசனை
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சி தடை சட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் தவிர அனைத்து தென்னிந்திய முதல்வர்களும் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலகினரிடம் இருந்தும் இந்த விஷயத்திற்கு எதிர்ப்புக்குரல் எழுந்து வருகின்றது.. நடிகை கஸ்தூரி, நடிகர் சித்தார்த் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் தற்போது பிரபல நடிகர் அரவிந்தசாமியும் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் வகையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர்தனது டுவிட்டரில், ‘உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், அதிகளவு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், நாம் இன்னும் மேஜையின் மீதுள்ள உணவுகளைப் பறிக்கும் வேலையைத்தான் செய்து வருகிறோம். இதே ஆற்றலை மக்களுக்கு உணவு அளிப்பதிலும் காட்டுங்கள். அதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன” என்று கூறியுள்ளார். அரவிந்தசாமியின் கருத்தை மத்திய அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்