ஆண்களுக்கு மட்டும்தான் ஆன்மீகமா? சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்விக்கு வாயடைத்து போன கேரள அரசு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் கேரள அரசு ‘பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது’ என்று பதில்மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஆன்மிகம் முழுதும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா? மதம் என்ற புலத்தில் பெண்கள் ஆன்மிக நிலையை அடைய லாயக்கற்றவர்கள் என்று கூறுகிறீர்களா? உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதால் கேரள அரசு வழக்கறிஞர் மற்றும் தேவஸ்தான பிரதிநிதிகள் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றனர்.
இந்த வழக்கை தாக்கல் செய்த சட்ட மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அவர்கள் தனது வாதத்தில், ‘பெண் பிரம்மச்சாரிகளும் இந்த உலகத்தில் உள்ளனர். அனைத்து ஆசைகளையும் துறந்து வாழ்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. நமது அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 என்ன கூறுகிறது என்றால், அனைத்து மனித இனத்துக்கும் பொதுவான மத ஸ்தலங்களை திறந்து விடுங்கள் என்கிறது. நாங்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்லர் என்று கூற வருகிறீர்களா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
கேரள அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் வி.கிரி கூறும்போது, சபரிமலைக்கு ஒரு வீட்டில் ஒரு ஆண் மாலையிட்டுக் கொள்கிறார் என்றால், பெண்கள், குழந்தைகள் உட்பட அவரை அவரது குடும்பமே ஆதரிக்கிறது, என்றும் “நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தடை பக்தர்கள் மனதில் உட்பொதிந்துள்ளது” என்றார்.
இதனையடுத்து நீதிபதி மிஸ்ரா, “அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படை உரிமையான சமத்துவம் என்பதை மீறி இந்த தடை மரபு நீடித்து நிலைக்கப் போகிறதா? வேதங்களிலும், உபநிடதங்களிலும் பெண்/ஆண் பாகுபாடு இல்லையெனும் போது, வரலாற்றில் எந்த காலக்கட்டத்தில் இந்தப் பாகுபாடு தொடங்கியது என்று கூறுங்கள்” என்று வலியுறுத்தினார்.
மேலும், தடைக்கு ஆதரவான ஆயிரமாண்டு கால நிரூபணத்தை 6 வாரங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வேணுகோபாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கிற்கு சட்ட, அரசியல் சாசன மற்றும் ஆன்மீக தளங்களில் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது என்பதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் என்பவரை நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளராக நியமித்து உத்தரவிட்டனர்.