தேர்வு எழுத செல்வர்களா நீங்கள்!

+2 exam

ஆசிரியர் அறிவுடை நம்பி தேர்வுக்கு முதல் வாரம் மாணவர்களிடம் கடைசி வகுப்பில் சில உபயோகமான தகவல்களைத் தெரிவித்தார்.

 “”மாணவர்களே நீங்கள் நன்கு படித்திருந்தாலும் விடைத்தாளில் நீங்கள் என்ன எழுதுகிறீர்களோ அதற்குத்தான் மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆகையால் விடைத்தாளில் எப்படி எழுதுவது எனச் சில குறிப்புகளைச் சொல்கிறேன்.

* முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடையளித்து விடுங்கள். தெரியாத வினாக்களைப் பிறகு முயற்சி செய்யுங்கள். அப்போதும் சந்தேகம் இருந்தால் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத முயலுங்கள். கையில் நல்ல பேனா பென்சில் இருப்பது முக்கியம். ஒன்றுக்கு இரண்டாக வைத்திருப்பதில் தவறில்லை.

* கணிதத்தில் கணக்குகளை அடிக்கடி போட்டுப் பழகுங்கள். கொஞ்ச நாளில் கை தானாக சமன்பாடுகளை எழுதிவிடும். ஞாபக சக்தியின் விநோதம் அது!

* விஞ்ஞான வரைபடங்களை அடிக்கடி வரைந்து பழகினால் விரல் தானாகச் சென்று படத்தை முடித்துவிடும்.

* மனப்பாடப் பகுதிகளைச் சிலர் உச்சரிப்புடன் உரத்த குரலில் படித்து மனனம் செய்வார்கள். அப்படிச் செய்யும்போது தேர்வு அறையில் அது உங்கள் குரலாக உங்கள் காதுகளில் திரும்ப விழுவதைப்போல் உணர்வீகள். விரைந்து எழுதி விடுவீர்கள். சிலசமயம் அது ஆசிரியர் குரலாக விடையைச் சொல்லக் கேட்பீர்கள்.

* சில கணித, வேதியியல், பௌதீக சமன்பாடுகளை, ஃபார்முலாக்களை மனனம் செய்பவர்களும் உண்டு.

* தேர்வுக்கு முதல் நாள் நல்ல உறக்கம் இருப்பது அவசியம். கண்களில் சோர்வில்லாது இருந்தால் வினாத்தாளை எளிதில் ஆராய்ந்து விடலாம்.

* ஆகவே டி.வி பார்க்காதீர்கள்.  செல்போனும் வேண்டாம்.

* அதிகம் உண்பது சிலசமயம் தூக்கம்போல மந்தமாக இருக்கும். அரை வயிற்றுக்கு உண்பதே நல்லது. இறுக்கமாக உடை அணியாதீர்கள். மூச்சு முட்டுவதுபோல இருக்கும். கொஞ்சம் தளர்வான உடை இலகுவாக எழுத உதவும்.

* வேகமாக சிலர் எழுதினால் எழுத்து கிறுக்கலாகி விடும். வேகமாக எழுதும்போது புரியும்படி எழுத நிறைய எழுதிப் பயிற்சி கொடுங்கள்.     

* ஹாலுக்குச் செல்லுமுன் அரட்டை, பாடம் பற்றி விவாதம் வேண்டாம். மனம் குவிந்து ஒரு நிலையில் இருக்க வேண்டும்.

* பாடம் என்பது சுமை ஏற்றுவது போலத்தான். ஒவ்வொரு செங்கல்லாக வைத்து வீடு கட்டுவதுபோல சிறுகச் சிறுக மனதில் அவற்றை ஏற்றி விடுவது திரும்பத் திரும்ப எழுதிப் பார்ப்பது, இவை பரீட்சை சமயத்தில் மனதை சாதராணமாக இலகுவாக டென்ஷன் இல்லாது வைத்திருக்கும்.

* அதிக மதிப்பெண் பெறும் பள்ளிகளில் அடிக்கடி தேர்வுகளை எழுத வைத்து அந்தத் தேர்வு இறுக்கத்தைத் தளர்த்தி விடுவார்கள்.  இறுதி அரசுத் தேர்வையும் பலர் சாதாரண பள்ளித் தேர்வாக எழுதிவிடுவார்கள். நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற எனது வாழ்த்துகள்”.

Leave a Reply