ஆராய்ச்சியாளராக விருப்பமா? முழு விபரங்கள் இங்கே…

scientistஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள், ‘பெரிய டாக்டராக வருவான், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வருவான்’ என்று கனவு காண்கிறார்கள். அதற்காக தங்களால் முடிந்த அளவு அதிக முயற்சி செய்து பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். ஆனால் பலரின் எண்ணம் ஈடேறுவதில்லை. அதற்காக கவலைப்படத் தேவையில்லை.

மாணவர்கள் கலை, அறிவியல் மற்றும் தொழிற்கல்வி என எந்த துறையை தேர்வு செய்து படித்தாலும் முதுநிலை படிப்பு   (PG)   படித்துவிட்டு பி.எச்டி என்னும் ஆராய்ச்சி படிப்பை வெற்றிகரமாக முடிக்கும்போது நீங்களும் உங்கள் துறையில் டாக்டர்   (முனைவர்)   பட்டம் பெற்றவர்கள் ஆவீர்கள். இந்த பி.எச்டி ஆய்வை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.

முதுநிலை படிப்பு படிக்கும்போதே பி.எச்.டி. படிப்புக்குத் தயாராக வேண்டும். முதுநிலை முடித்தபின் நேரடியாக பி.எச்டி ஆய்வை தொடரலாம். நிதியுதவி ஏதுமின்றி இந்த ஆராய்ச்சி படிப்பை மூன்று ஆண்டுகள் மேற்கொள்வது கடினம். ஆனால் பல்கலைக் கழக மானியக்குழு   (UGC )   மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழிற்மைய ஆராய்ச்சி (CSIR) அமைப்புகளால் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வான  (NET) இளநிலை ஆராய்ச்சி பெல்லோசிப் தேர்வில் வெற்றி பெறும்போது, பொருளாதார நெருக்கடியின்றி ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். எதுபற்றிய ஆய்வை தொடர்கிறீர்கள் என்பதை பதிவு செய்து கொண்டு தேசிய ஆராய்ச்சி கூடங்களிலோ அல்லது ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திலோ ஆய்வைத் தொடரலாம். மூன்று ஆண்டுகள் நிதி உதவி கிடைக்கும்.

அறிவியல் பிரிவினர்,   CSIR    மூமாகவும், கலை படிப்புகளை படித்தவர்கள்   UGC &CBSE   மூலமாகவும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வேளை மூன்று ஆண்டுகளில் பி.எச்டி முடிக்கவில்லையென்றால்   UGC    என்னும் நிதி உதவியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பெறலாம். இதைப் பெற நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

எனவே முதுகலை படித்து கொண்டிருக்கும்போதே இந்த தேர்வை எழுதி தயாராகிவிட்டால் காலம் விரயமின்றி உடனடியாக பி.எச்டி படிப்பை தொடரலாம். இதற்கான பாடத்திட்டங்கள், மாதிரி வினாக்கள் போன்றவற்றை அந்தந்த அமைப்புகளின் இணையதளங்களில் காணலாம்.

இந்த தேர்வுகள் சற்று கடினமாக இருந்தாலும் அநேக பல்கலைக்கழகங்கள் தங்களது முதுநிலை பாடத்திட்டங்களில், தகுதி தேர்வின் (என்.இ.டி) பாடத்திட்டத்தின் பெரும் பகுதியை சேர்த்துக் கொள்வதால் மாணவர்கள் முதுகலை படித்து முடிக்கும்போதே இந்த தேசிய தகுதி தேர்வையும் எழுதி தகுதி பெற்று விடுகின்றனர்.

எனவே முதுநிலை படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறுவதற்காக மட்டும் படிக்காமல், இந்த ஆராய்ச்சி தேசிய தகுதி தேர்வில் வெற்றிபெறும் வகையில் மிக கவனமாக படிக்க வேண்டும். குறிப்பாக தேர்ந்தெடுத்து விடையளிக்கும் முறையில் நிபுணத்துவம் பெற வேண்டும்.

இந்த தகுதித் தேர்வில் பல்கலைக்கழக தேர்வில் உள்ளது போன்று பக்கம் பக்கமாக விடைகள் எழுத வேண்டியது இருக்காது. கொள்குறி வினாக்களே   (Objective type) இடம் பெற்றிருக்கும். தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறையவும் வாய்ப்பு உண்டு. இந்த தேர்வானது ஆண்டிற்கு இரண்டு முறை அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில், நாடு முழுவதும் பல மையங்களில் நடைபெறுகிறது.

இந்த தேர்வுகள் எழுதாமலும் நிதி உதவியை பெறலாம். குறிப்பாக   SC/ST   பிரிவினர் மத்திய அரசின் ராஜீவ் காந்தி தேசிய நிதிஉதவியை பெறலாம். தமிழ்நாட்டில் அரசு கலைக்கல்லூரிகளில் அல்லது அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.எச்டி ஆய்வை மேற்கொள்ளும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கல்லூரி கல்வித்துறை மூலமாக நிதிஉதவி வழங்கப்படுகிறது. மேலும் ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்களில் உள்ள ஆராய்ச்சி திட்டங்களுக்கு   UGC, CSIR, DRDO, DBT, DST, ICSSR, ICHR     போன்ற  அமைப்புகளால் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி திட்டங்களில், ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளராக இணைந்து ஆய்வை மேற்கொள்ளலாம்.  தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக பல்கலைக் கழக ஆராய்ச்சி உதவித்தொகை பி.எச்டி ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

இவை தவிர பகுதி நேர முறையிலும் பி.எச்டி ஆய்வை மேற்கொள்ளலாம். பகுதி நேரமாக பி.எச்டி ஆய்வை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிமுறைகளை அறிந்து, விண்ணப்பித்து பகுதி நேர பி.எச்டி ஆய்வை மேற்கொள்ளலாம்.  ஆய்வு வழிகாட்டி உதவியுடன் சமுதாயத்திற்கு நலன் பயக்கும் பி.எச்டி. ஆய்வை மேற்கொண்டு டாக்டர் (Doctorate ) பட்டம் பெற வாழ்த்துக்கள்.

இ.ஜி.வெஸ்லி, உதவிப்  பேராசிரியர்,
தாவரவியல் துறை,
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி,
நாமக்கல்.

Are you want to be a scientist?

Leave a Reply