அர்ச்சுனனுக்கு வந்த சோதனை

Arjuna1

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடந்த குருஷேத்திரப் போரின் பதிமூன்றாம் நாள் பாண்டவர் களுக்கு கவலையளிப்பதாக அமைந்து விட்டது. வில்லில் வித்தை காட்டும் அர்ச்சுனனின் மகனும், இளம் வயதிலேயே வீரத்தில் விளைந்தவனுமான அபிமன்யு போரில் கொல்லப்பட்டுவிட்டான். அர்ச்சுனனின் கண்ணில் கண்ணீரைத் தாண்டி, கனல் தெரித்துக் கொண்டிருந்தது. தன் மகனைக் கொன்றவனை ஜயத்ரதனை பழிவாங்கும் எண்ணத்தை அந்தக் கண்கள் அனைவருக்கும் பறைசாற்றின.

அர்ச்சுனன் கண்கள் சிவக்க ஒரு சபதம் செய்தான். ‘நாளை சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக, அபிமன்யுவின் இறப்புக்கு காரணமான ஜயத்ரதனைக் கொல்வேன். சூரிய அஸ்தமனம் தாண்டியும் ஜயத்ரதன் கொல்லப்படாமல் இருந்தால், நான் அக்னியில் குதித்து என் வாழ்வை முடிப்பேன்’ என்று சூளுரைத்தான்.

பதினான்காம் நாள் போர் தொடங்கிவிட்டது. போர் உக்கிரமாக நடைபெற்றது. கவுரவர்களும், பாண்டவர் களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் போர் புரிந்தனர். அர்ச்சுனன் தன் சபதத்தை நிறைவேற்றும் விதமாக ஜயத்ரதனுடன் போரில் ஈடுபட்டிருந்தான். ஆனால் அவனால் அவ்வளவு எளிதில் ஜயத்ரதனை வீழ்த்த முடியும் என்று தோன்றவில்லை. அந்தி சாயும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

தன் பக்தனான அர்ச்சுனன் தோல்வியுறுவதை கண்ணனால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?. அவர் தன் சக்ராயுதத்தை வானை நோக்கி வீசினார். அது சூரியனை மறைத்து இருளை உண்டாக்கியது. திடீரென்று வானில் இருள் சூழ்வதைக் கண்ட ஜயத்ரதன் வானை நோக்கி தலையை உயர்த்திப் பார்த்தான். இது தான் சமயம் என்று எண்ணிய கண்ணன், ‘அர்ச்சுனா! ஜயத்ரதன் தலையை உயர்த்தி சூரிய மண்டபத்தைப் பார்க்கிறான். அவனுடைய தலையை விரைவாக கொய்து விடு!’ என்றார்.

தனக்காக சூரியனை மறைத்து இருளுண்டாக்கிய கண்ணனை நினைத்து வியந்த அர்ச்சுனன், தேவர்களாலும் தாங்க முடியாத வஸ்திரமான திவ்யாஸ்திரத்தை எடுத்து விட்டான். அந்த அம்பு விரைந்து சென்று, ஜயத்ரதனின் தலையைக் கொய்தது. தன் மகனைக் கொன்றவனை, அழித்து விட்ட மகிழ்ச்சியில் திளைத்தான் அர்ச்சுனன். தன் சபதம் நிறைவேறிவிட்டதை நினைத்து பெருமிதம் கொண்டான். ஆனால் உண்மையான பிரச்சினை இனிமேல்தான் இருக்கிறது என்பதை அவன் அறியவில்லை.

ஜயத்ரதனின் தலை விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. அப்போது கண்ணன், ‘அர்ச்சுனா! அந்தத் தலையை பூமியில் விழுந்து விடாதவாறு செய்!’ என்றார்.

கண்ணனின் குரலைக் கேட்டதும், என்ன, ஏது என்று கேட்காமல் தொடர்ந்து அம்பு கணைகளை விடுத்து ஜயத்ரதனின் தலையை மண்ணில் விழாதபடி நகர்த்திக் கொண்டே இருந்தான் அர்ச்சுனன். எவ்வளவு நேரம்தான் இப்படி செய்து கொண்டே இருப்பது? அர்ச்சுனன் பொறுமை இழந்தான்.

‘கண்ணா! இன்னும் எவ்வளவு தூரம் நான் இதைக் கொண்டு போவேன்? ஏன் இந்தத் தலையைப் பூமியில் தள்ளக் கூடாது?. இதை எந்த இடத்திற்கு கொண்டு போக வேண்டும்?’ என்று கேள்விகளை அடுக்கினான்.

‘அர்ச்சுனா! ஜயத்ரதனுடைய தந்தையாகிய விருத்தட்சத்திரன், தன் மகன் தலையை எவன் பூமியில் தள்ளுவானோ, அவனுடைய தலையும் நூறு துண்டாக சிதற வேண்டும் என்று கடும் தவம் புரிந்து கொண்டிருக்கிறான். அதனால் அவனது தலையை நீ பூமியில் விழும்படி செய்தால், உன் தலை சிதறி விடும். எனவே ஜயத்ரதனின் தலையை, தவம் செய்து கொண்டிருக்கும் அவனது தந்தையின் மடியில் விழும்படி செய்!’ என்று கட்டளையிட்டார்.

அர்ச்சுனனும், கண்ணபிரான் சொன்னபடியே ஜயத்ரதனின் தலையை, தவம் செய்து கொண்டிருந்த அவனது தந்தையின் மடியில் விழும்படி செய்தான். தவம் முடிந்து விருத்தட்சத்திரன் எழுந்தபோது, தலை மண்ணில் விழுந்தது. இதனால் தலையை மண்ணில் தள்ளிய அவரது தலை நூறு துண்டுகளாக சிதறியது.

தனக்காக இரவை பகலாக்கியதோடு, தலையால் வர இருந்த ஆபத்தையும் அகற்றிய கண்ணபிரானை, பணிவாக வணங்கினான் அர்ச்சுனன்.

Leave a Reply