சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகிறார் ஹாலிவுட் அர்னால்ட்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள ‘கபாலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17 முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன் நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே அல்லது காத்ரீனா கைப் நடிப்பார் என கூறப்படும் நிலையில் இந்த படத்தின் வில்லனை தற்போது ஷங்கர் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. முதலில் ரஜினிக்கு வில்லனாக கமல்ஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகியோர்களில் ஒருவர் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவருமே வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதை அடுத்து, தற்போது ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் இந்த படத்தின் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து, எத்தனை நாள் கால்ஷீட், எவ்வளவு சம்பளம் என்பது குறித்த இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டின்போது பேசிய அர்னால்ட், ‘ஷங்கர் படத்தில் நடிக்க ஆர்வமுள்ளதாக கூறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். நம்மூர் சூப்பர் ஸ்டாரும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும் ஹீரோ-வில்லனாக மோதும் காட்சியை ஷங்கர் இயக்கத்தில் பார்த்தால் உண்மையில் பிரமாண்டத்தின் உச்சகட்டமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.