உலகிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து 1200 கைதிகள் தப்பித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது. உலகெங்கிலும் தனது தீவிரவாத நடவடிக்கைகளால் அச்சுறுத்தி வரும் அல்கொய்தா அமைப்பு, அதிரடியாக ஏமன் நாட்டின் சிறையை தகர்த்து 1200 கைதிகளை தப்பிக்க வைத்துள்ளதால் அந்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நகரான தாய்ஸில் உள்ள சிறையில் நேற்று அல்-காய்தா தீவிரவாதிகள் அதிரடியாக புகுந்து சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி சிறையை தகர்த்தனர். இதில் சிறையில் இருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் உள்பட சுமார் 1200 கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏமனில் சிறை தகர்ப்பு நிகழ்வு என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வுதான் என்றாலும் ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பித்து செல்வது ஏமனில் மட்டுமல்ல உலகிலேயே இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது. இந்தச் சதியின் பின்னணி மற்றும் இந்த சதியை தலைமை ஏற்று நடத்தியவர் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.