” சாவுக்கு பயந்தவனுக்குதான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருமுறைதான் சாவு”
அஜீத்தின் இந்த பன்ச் டயலாக்குடன் ஆரம்பிக்கிறது ஆரம்பம் ட்ரெய்லர். இந்த ட்ரெய்லருக்காகதான் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்தனர். பில்லா 2-வின் தோல்வியை ஆரம்பம் மறக்கடிக்குமா என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது. அதற்கு ஒரு சோறு பதமாக வந்திருக்கிறது ட்ரெய்லர்.
ட்ரெய்லரில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, தாப்ஸி, கிஷோர், ராணா, அதுல் குல்கர்னி என்று அனைவரும் வருகிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
அஜீத்தின் பலவீனம் என்றால் அவரின் ஸ்லோ மாடுலேஷன் குரல். அதனை இந்தப் படத்தில் சுத்தமாக களைந்திருக்கிறார். எந்த தடங்கலுமின்றி சரளமாக வருகின்றன வசனங்கள்.
அதிலும் குறிப்பாக நயன்தாராவை கட்டிப்போட்டு ஆர்யாவை மிரட்டுகிற இடம். உன்னோட புத்திசாலித்தனத்தால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். நான் அழிக்கப் போறேன் என்கிற வசனம். அதேபோல் மேக் இட் சிம்பிள் என்ற பிரயோகம். சுருக்கமாக அஜீத்தின் வசன உச்சரிப்பில் கம்பீரம் கூடியிருக்கிறது.
ஆக்சன் காட்சிகளுக்கு நடுவில் ஆர்யாவின் கலர்ஃபுல் காதல் காட்சிகளும் வருகின்றன. தாப்ஸியிடம் மண்டியிட்டு, மேரி மீ என்கிறார் ஆர்யா. ரொமாண்டிக் காட்சிகளுக்கு இது உத்தரவாதம் தருகிறது.