பன்னீர்செல்வத்தை கைது செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின் ஆவேசம்

stalinஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு முதலமைச்சராக இருந்து கொண்டே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பன்னீர்செல்வத்தை கைது செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆவேசமாக தனது பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

நேற்று ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளரை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் சோமரசம்பேட்டை என்ற பகுதியில் அவர் பேசியதாவது:

 ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வந்திருக்கக்கூடிய தேர்தல் விபத்து அல்லது மறைவின் காரணமாக அந்த இடத்தைப் பூர்த்தி செய்வதற்காக வந்திருக்கக்கூடிய இடைத்தேர்தல் அல்ல. ஊழல் வழக்கில் ஒருவர் சிக்கி, தண்டனை பெற்ற காரணத்தால் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. ஜெயலலிதாவின் பினாமி ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு எந்த வித ஆபத்தும் வந்துவிடப்போவதில்லை. இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் தான் ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற நிலை இல்லை.

அதுமட்டும் இல்லை. இந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் ஆட்சிக்கு வந்துவிடும் என்றும் இல்லை. 2016ல்தான் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருக்காது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு அச்சாரமாக இருக்கும்.

ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக எப்படியாவது பல கொடுமைகளை, அக்கிரமங்களை ,அநியாயங்களை, அராஜகங்களை எல்லாம் கட்டவிழ்த்துவிட்டு எப்படியாவது தேர்தலில் வென்றுவிடவேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று 12 மணியில் இருந்து இந்த நிமிடம் வரை பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கக் கூடிய நிலையைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், வாக்காளருக்கு 2000 ரூபாய் வந்து சேர்ந்ததாக கேள்விப்பட்டோம். ஆக, ஓட்டுக்கு பணம் கொடுப்பதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள். இதுதான் இங்கு வேடிக்கை.

இன்றைக்கு பினாமியாக இருக்கும் ஒரு முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவில்லை. இந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கும் வரவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் எந்தத் தொகுதிக்கும் செல்லவில்லை. ஆனால், நேற்று முன்தினம் திடீரென்று திருச்சிக்கு வந்திருக்கிறார்.

முதலமைச்சராக வந்த பினாமி ஓ.பன்னீர்செல்வம் ஒரு தனியார் ஹோட்டலிலே தங்கினார். அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து ஹோட்டலில் விவாதித்து சதி செய்து எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

ஒரு முதலமைச்சரே எந்த அரசு விழாவும் இல்லாமல், தொகுதிக்கும், பிரச்சாரத்துக்கும் வராமல், எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அதுதான் நேற்று இரவும், இன்று விடியற்காலையும் வாக்களார் வீடுகளில் வந்து சேர்ந்திருக்கிறது. கொடுத்தது 5000 ரூபாய். வாக்காளருக்கு கிடைத்தது 2000 ரூபாய்.

இதுகுறித்து திமுக சார்பில் வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், வேட்பாளர் அகையோர் மாவட்ட ஆட்சியர், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்டார்களே தவிர எந்த வித நடவடிக்கையிலும் இன்னும் ஈடுபடவில்லை.

ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என்பதை பகிரங்கமாக சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அதனால், ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு போடவேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும்.

நான் சொல்வதில் தவறு ஏதேனும் இருந்தால் என்மீது வழக்கு போடுங்கள். என்னைக் கைது செய்யுங்கள்”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Leave a Reply