சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும். மீனவப் பிரநிதி கோரிக்கை
மீனவர் பிரிட்ஜோ படுகொலை உள்பட தமிழர்களை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவப் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவப் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது,
”தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றவும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரணிமணியன் சுவாமி தான் என்பதை ஏற்கெனவே அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 140 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
தற்போது மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது ட்விட்டரில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரணிமணியன் சுவாமி கூறியுள்ளது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் நிலைப்பாடா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை முடக்கிய குற்றத்திற்காகவும், தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும்” என்று கூறினார்.