தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!

murungai01

முருங்கை… நுனி முதல் வேர் வரை மருத்துவப்பயன் மிக்கது என்பதால் இதை பிரம்ம விருட்சம் என்பார்கள்.

முருங்கையில் இரண்டு வகை உண்டு. முருங்கை மற்றும் காட்டு முருங்கை. முதல் வகை முருங்கையில் சோற்று முருங்கை, பனி முருங்கை, கோடை முருங்கை, நீர் முருங்கை போன்றவற்றை உண்பதன் மூலம் நோய்கள் நீங்கும். சோற்று முருங்கையின் காயை உண்டால் அது எலும்பினுள் உள்ள பசைக்கு பலம் சேர்க்கும். மஜ்ஜையை அதிகப்படுத்தும். மேலும், கல்லீரலில் பித்தத்தை சுரக்க வைக்கும் இந்த சோற்று முருங்கையின் கீரை எக்காலத்திலும் கிடைக்கக்கூடியது. இதன் கீரையை சமைத்து உண்பதால் கணையத்தில் சமான வாயுவை சுரக்கச்செய்யும். (சமான வாயுவானது பசி, தாகம், செரிமானம், உடல் சூடு ஆகியவற்றை சரி செய்து சமநிலையில் வைக்கக்கூடியது)

அடுத்தது, பனிமுருங்கையில் உள்ள பட்டையை ஐந்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து 100 மில்லி பாலில் போட்டு வேக வைத்து இரவு தூங்கப்போகும் முன் குடித்து வந்தால் எப்படிப்பட்ட நோயால் அவதிப்பட்டு தூக்கம் வராமல் போனாலும் நிம்மதியான தூக்கம் வரும். கோடை முருங்கையின் கீரை, மூட்டுகளில் உள்ள வீக்கங்களை, அதாவது பித்த வாயுவை குணப்படுத்தும். இந்தக் கீரையை கசாயம் வைத்தோ, சாம்பார் வைத்தோ சாப்பிட்டு வந்தால் நீர் போகும். இதனால் வாயுக்கோளாறுகள் விலகுவதோடு பிடிப்புகள் விலகும். இதன் கீரையை உப்புடன் சேர்த்து கசக்கி அரை டீஸ்பூன் அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலிகளை குணப்படுத்துவதோடு, பின்நாட்களில் வயிற்று வலிகள் வராமலிருக்கச் செய்யும். இதன் பட்டை 100 கிராம் எடுத்து 20 கிராம் மிளகு, 5 கிராம் சுக்கு சேர்த்து நசுக்கி மாட்டுக்குக் கொடுத்தால் வயிறு உப்புசம், நீர்க்கோழை மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.

நீர் முருங்கையின் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் கால் வலி விலகும். ஜீரணக்கோளாறுகள் விலகுவதோடு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இதன் காயில் உள்ள பருப்பை நெய்விட்டு வறுத்து இடித்துப் பொடியாக்கி சாம்பாரிலோ, ரசத்திலோ அரை டீஸ்பூன் அளவு 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

மேலும், வாதக்கோளாறு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையுடன், வாதநாராயணன் மற்றும் நச்சு கெட்ட கீரை எனப்படும் லெச்சக்கொட்டை கீரையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

சித்த மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சியைப்போக்க மருந்து செய்யும்போது அதில் முருங்கை விதை அல்லது முருங்கைப் பிசின் முக்கிய இடம் வகிக்கிறது. இத்தகைய மருந்துகள் ஆண்களுக்கு வரக்கூடிய ஆண்மைக்குறை, குழந்தைப்பேறின்மை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளையும் போக்கக்கூடியது.

Leave a Reply