கார்த்திகை முதல் தேதி முதல் மார்கழி 11 வரை 41 நாள் களபாபிஷேகம் (சந்தனம்) நடக்கும். மார்கழி 1 முதல்11 வரை உள்ள தேதிகளில் சிறப்பு பூஜை, அர்ச்சனை நடக்கும். மார்கழி 11ம் தேதி தனியார் பூஜை. சரஸ்வதி பூஜை நாட்களில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும். தினமும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.
தல சிறப்பு:
இங்கு அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க, அம்பாள் வெயிலில் நின்று தரிசனம் தருகிறாள்.
தலபெருமை:
திருவிழாவின்போது 41 நாளும் அம்மனுக்கு சந்தன அபிஷேகம் நடைபெறும். ஒரு நாள் சந்தன அபிஷேகம் 8000 ரூபாய்.
தல வரலாறு:
செண்பகசேரி மகாராஜாவுக்கு இத்தலம் அரண்மனையாக இருந்தது. இந்த ராஜா காலத்தில் இத்தலத்தில் அம்பாள் பெண்ணாக, வனதுர்க்கையாக அவதரித்து, அவளது சகோதரியுடன் முல்லைக்கொடி அருகே தினமும் விளையாடி வந்தாள்.
ஒரு முறை அந்த கொடி அருகே அம்மனின் விக்ரகம் கிடைத்தது. ஆரம்பத்தில் துர்க்கையாக இருந்தவள் பின் பிரசன்னத்தில் இவள் அன்னதான பிரபு என்பதை அறிந்தனர். எனவே இவளுக்கு முல்லைக்கள் ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் சூட்டி இத்தலத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டாள்.அம்பாள் அசரீரியாக மன்னனிடம், தான் இங்கு முல்லை கரை அருகே அருள்பாலிப்பதாவும், கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினார்.மன்னனும் அப்படியே கோயில் கட்டி அம்பாளை பிரதிஷ்டை செய்யும்போது கர்ப்பகிரகத்தின் மேல்பகுதி மூடப்பட்டது. அன்று இரவே மேல்கூரை தீப்பிடித்தது. பிரசன்னம் கேட்டபோது, தான் குழந்தை வடிவில் இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகாயம், காற்று, மழை ஆகியவற்றை பார்த்து நான் நேரடியாக அனுபவிக்க வேண்டும். எனவே மேற்கூரை இல்லாமல் மூலஸ்தானத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதால் மேற்கூரை கிடையாது.
மழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூறையை மூடுகிறார்கள். இந்த உலகையே ஆளும் அம்மன் மழையிலும், வெயிலிலும் நிற்க, நாம் சுகமாக நிழலில் நின்றபடி அவளை தரிசிக்கிறோம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க, அம்பாள் வெயிலில் நின்று தரிசனம் தருகிறாள்