விஜய் மல்லையாவிடம் இருந்து ஒரு பைசா மீதமில்லாமல் வசூல் செய்யப்படும். அருண்ஜெட்லி
ஸ்டேட் வங்கி உள்பட இந்தியாவில் உள்ள 17 முன்னணி வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டு தப்பித்து சென்ற விஜய்மல்லையாவிடம் இருந்து அனைத்து கடன்களையும் ஒரு பைசா மிதமில்லாமல் வசூல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அருண்ஜெட்லி, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, “, ”விஜய் மல்லையாவிடம் இருந்து முழு தொகையும் வசூலிக்கப்படும். அவர் எந்தெந்த சட்டத்தையெல்லாம் மீறியுள்ளாரோ அதற்கேற்ப அமலாக்கப்பிரிவு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என கூறியுள்ளார்.
ஆனால் அருண்ஜெட்லியின் இந்த கருத்தை தாங்கள் நம்ப தயாராக இல்லை என்றும் விஜய் மல்லையா தப்பி செல்வதற்கு முன்பே இதுகுறித்து அருண் ஜெட்லிக்கும், சுப்பிரமணியன் சுவாமிக்கும் தெரியும் என்றும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை வசூல் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ள அருண்ஜெட்லி எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கவுள்ளது என்பதை தெளிவாக விளக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.