டெல்லி பலாத்கார சம்பவம் அளவுக்கு அதிகமாக உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டதால், இந்திய சுற்றுலாத்துறைக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறிய மத்திய நிதி அமைச்சருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
டெல்லியில் இன்று நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “பாலியல் பலாத்கார சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஒரு “சின்ன” பாலியல் பலாத்கார சம்பவம் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டு சுற்றுலாத்துறையில் இழப்பை ஏற்படுத்த போதுமானதாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி டெல்லி பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த மருத்துவமாணவியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடையே கூறியபோது, “எனது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தது இந்த தேசத்திற்கு இழப்பு கிடையாதா? சுற்றுலாத்துறையின் இழப்பை விட எனது மகளின் இழப்பு அவ்வளவு சிறியதாக நிதியமைச்சருக்கு போய்விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அருண் ஜெட்லியின் கருத்துக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நிர்மலா சாமந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் ஜெட்லி பின்னர் தனது வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.