நீதிமன்றத்தால் காப்பற்றப்பட்ட அருணாச்சல பிரதேச அரசு நாளை பிழைக்குமா?
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்க்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, கலிக்கோ புல் ஆட்சி விலக்கப்பட்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி சமீபத்தில் ஏற்பட்டு, நபம் துகி முதலமைச்சராக பதவியேற்றார்.
கோர்ட் உத்தரவை அடுத்து முதல்வர் நபம் துகி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தன்னுடைய பெரும்பான்மையை ஜூலை 16ஆம் தேதி நிரூபித்து காட்ட வேண்டும் என்று அம்மாநில கவர்னர் பொறுப்பை கவனித்து வரும் திரிபுரா கவர்னர் ததாகதா ராய் உத்தரவிட்டார். ஆனால் கவர்னரின் உத்தரவை ஏற்க முதல்வர் நபம்துகி மறுத்துவிட்டார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தனக்கு குறைந்தது 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து தனது முடிவை தெரிவிப்பதாக முதலில் தெரிவித்த கவர்னர் பின்னர் திடீரென வாக்கெடுப்பை தள்ளி வைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியதோடு, நாளை வாக்கெடுப்பை கண்டிப்பாக நடத்தும்படி உத்தரவிட்டார். ஆனால் இந்த குறுகிய காலத்திற்குள் சட்டமன்றத்தை கூட்டுவது சாத்தியம் இல்லை என்என்று சபாநாயகர் தெரிவித்தார்.
மெஜாரிட்டியை நிரூபிக்க 30 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், நபம் துகி தலைமையிலான காங்கிரசில் 15 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். ஏதாவது அரசியல் அதிசயம் நடந்தால் தவிர அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்வது என்பது ஒரே இரவிற்குள் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, நபம் துகியின் ஆட்சி நிலைக்குமா அல்லது கவிழுமா என்பது நாளை காலை தெரிந்துவிடும்.