ஒருமுறை ராஜினாமா செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன். டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். ராஜினாமா செய்ய மாட்டேன்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு வரும் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும்தான் போட்டி என கூறப்படுகிறது. பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் பெண்மணி என்ற பெயர் பெற்ற கிரண்பேடி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் டெல்லி மக்களுக்கு கூறியிருப்பதாவது: “கடந்த முறை முதல்வர் பதவியைவிட்டு நான் விலகியது குறித்து டெல்லி மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
நாங்கள் பொய் சொல்லவில்லை, எதையும் திருடவில்லை. ஆனால், தங்களுடைய நம்பிக்கையை இழக்கும் வகையில் நான் நடந்து கொண்டதாக மக்கள் கருதினார்கள். அதற்காக அவர்களிடம் நான் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு தடவை அப்படி நடந்து விட்டது என்பதால் இனிமேலும் அப்படி நடக்காது.
பிரதமராகும் ஆசையில்தான் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதாக மக்களிடையே பரவலாக ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அது உண்மை அல்ல. நான் முதல்வர் பதவியைவிட்டு விலகிய உடனேயே டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி நடக்காததால் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன்.
இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை மக்கள் முழுப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த முறை முதல்வரானால் நான் முன்புபோல் ராஜினாமா செய்யமாட்டேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்”
டெல்லியில் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.