பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில், பதிவுகளை லைக் (like) செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த ஃபேவரிட் (favourite) வசதியே லைக் என மாற்றப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் நமக்குப் விருப்பமான பதிவுகளை குறித்துக் கொள்ள வசதிகள் உள்ளது. இது தளத்துக்கு தளம் வேறுபடும். ஃபேஸ்புக்கில் லைக் என்ற பட்டனை அழுத்தி பதிவு நமக்கு விருப்பமானது என்பதை தெரிவிக்கலாம். ட்விட்டரில், இதற்கு முன்பு, நட்சத்திர (star) வடிவில் இருக்கும் பட்டனை அழுத்தி, அந்த பதிவு நமக்கு ஃபேவரட் / பிடித்தம் என தெரிவிக்கலாம்.
தற்போது இந்த ஃபேவரட் நட்சத்திர பட்டன், இதய வடிவில் (hearts) மாற்றப்பட்டு லைக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ட்விட்டரின் வைன் ஆன்ட்ராய்ட் செயலியிலும் இந்த லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“நமக்கு விருப்பமான அனைத்து பதிவுகளும் நமக்கு ஃபேவரிட்டாக / பிடித்தமானதாக இருக்க முடியாது. அதனால் இப்படி மாற்றப்பட்டுள்ளது” என ட்விட்டர் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் ஒருவரை பின் தொடர்வதற்கு இருக்கு ஃபாலோ பட்டனை போன்றே ஃபேஸ்புக்கிலும் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது, ஃபேஸ்புக்கில் இருப்பதைப் போல லைக் செய்யும் வசதி ட்விட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சமூக வலைதளங்களும் ஒன்றை ஒன்று காப்பி அடிக்கின்றனவா அல்லது பரஸ்பரம் தாக்கம் கொள்கின்றனவா என நெட்டிசன்கள் சிலர் விவாதித்து வருகின்றனர்.