சென்னையை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன், கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை வீரத்தோடு எதிர்கொண்டு நாட்டிற்காக தனது உயிரை அர்ப்பணித்தார். அவருடைய வீரதீர செயலுக்காக நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி “அசோக சக்ரா” விருதை அறிவித்தார்.
மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் அவர்களின் மனைவி இந்து மற்றும் 3 வயது மகள் அர்ஷியா ஆகியோர் தற்போது பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்து ராணுவ பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த ‘அசோக சக்ரா’ விருது மேஜர் முகுந்துக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை தாம்பரத்தில் வசித்து வரும் முகுந்தின் தந்தை வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த விருது கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. மனதிற்கு ஒரு தெம்பை கொடுக்கிறது. கஷ்டத்தில் இருந்து வெளியே வருவதற்கு உறுதுணையாக இருக்கிறது. என் மகனின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக, பெருமையாக இந்த விருதை கருதுகிறேன். என் மகன் இல்லை என்ற கஷ்டத்திலும் அவருக்கு வழங்கப்பட்ட இந்த உயரிய விருதால் அதை சந்தோஷமாக எடுத்துக்கொள்ள முடிகிறது. என் மகனின் கடின உழைப்பிற்கு மக்கள் முன் கிடைத்துள்ள அங்கீகாரமாக நினைக்கிறேன்’’ என்றார்.