வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஷ்ரபுல் சூதாட்டத்தில் சிக்கியதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால் அவருக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த பி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சில முன்னணி வீரர்கள் மீது புகார் எழுந்தது.
இந்த புகாரில் சிக்கியவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல் ஆவார். இந்த புகாரை விசாரணை செய்ய வங்கதேச கிரிக்கெட் வாரியம் சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றை அமைத்தது. தீர்ப்பாயத்தின் விசாரணையில், முகமது அஷ்ரபுல், சூதாட்டத்தில் ஈடுபட்டதை வேறுவழியின்றி ஒப்புக் கொண்டார்.
எனவே அவருக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தீர்ப்பாயத்தின் தலைவர் காதிமுல் இஸ்லாம் தெரிவித்தார்.
வங்கதேசத்தின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த 29 வயதான அஷ்ரபுல் 61 டெஸ்ட் மற்றும் 177 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.