நேற்று வங்கதேசத்தின் மிர்புர் நகரில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நடந்தது. இந்த போட்டியில் இலங்கை அணி அபாரமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகள் கலந்து கொண்ட ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்கத்திலேயே முதல் மூன்று விக்கெட்டுக்களை இலங்கை அணியின் மலிங்கா, தன்னுடைய அபாரமான பந்துவீச்சில் வீழ்த்தி, பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 18 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து கொண்டிருந்த பாகிஸ்தான் அணியை பவாட் அலாம் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி கெளரவமான ஸ்கோருக்கு உயர்த்தினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. பவாட் அலாம் 114 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களம் இறங்கிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் திரிமினே 101 ரன்கள் எடுத்து அபார தொடக்கத்தை கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த பெராரே 42 ரன்கள் எடுத்தார். பின்னர் ஜெயவர்தெனே 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 75 ரன்கள் அடித்தார். இலங்கை அணி 46.2 ஓவரில் 261 ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது.
ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய மலிங்கா ஆட்டநாயகனாகவும், திரிமின்னே தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.