சீனா, இந்தியா, தென்கொரியா, வடகொரியா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்பட பல ஆகிய நாடுகள் கலந்துகொள்ளும் 17வது ஆசிய விளையாட்டு போட்டி, தென்கொரியாவில் நேற்று மாலை கண்கவரும் வண்ண வண்ண கலைநிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசிய கொடியுடன் அணிவகுத்து சென்றனர். நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா, ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியில் ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து 9,429 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தென்கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர்.. மொத்தம் 36 வகையான பந்தயங்களில் 439 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.
நீச்சல், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் (ஒரு வகை படகு போட்டி), சைக்கிளிங், குதிரையேற்றம், கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட் பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, துடுப்பு படகு, செபக்தாக்ரா (கைப்பந்து பாணியில் பந்தை காலால் உதைக்கும் ஒரு வகை விளையாட்டு), துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், தேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கைப்பந்து, மல்யுத்தம், வுசூ, பளுதூக்குதல், பாய்மர படகு ஆகிய 28 விளையாட்டுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது.
இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்று பதக்க பட்டியலில் இடம்பிடித்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஸ்வேதா சவுத்ரி, மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோல், துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா முதல் தங்க பதக்கத்தை வென்றுள்ளது. ஆடவர் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜீது ராய் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
ஜிது ராய் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்றவர்.கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் இவர் தங்கம் வென்றுள்ளார்.