விஜய் மல்லையாவை பிடித்தால்தான் அபராதம் கட்டுவேன். கோடீஸ்வர பெண்ணின் பிடிவாதத்தால் பரபரப்பு.
மும்பையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த ஒரு பெண், ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய விஜய் மல்லையாவை பிடித்தால் மட்டுமே தான் அபராதம் செலுத்துவேன் என்று கூறியதால் தொடர்ந்து 12 மணி நேரம் அந்த ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
44வயது பிரேமலதா என்ற பெண் மும்பையில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் நேற்று மும்பை ரயில் நிலையத்தில் டிக்கெட் இன்றி இருந்ததாக கூறி ரூ.260 அபராதம் செலுத்தும்படி டிக்கெட் பரிசோதகர் கூறினார். ஆனால் தான் அபராதம் கட்ட முடியாது என்றும் விஜய் மல்லையா போன்றவர்களிடம் ரூ.9000 கோடியை வசூல் செய்ய முடியாத இந்த அரசு ஏழை எளியவர்களிடம் ரூ.200, 300 என கறாராக வசூல் செய்வதை தான் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார்.
டிக்கெட் பரிசோதகர், ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே போலீசார் மற்றும் அந்த பெண்ணின் கணவர் என பலர் எடுத்து கூறியும் பிரேமலதா பிடிவாதமாக அபராதம் கட்ட முடியாது என்றும் வேண்டுமானால் தன்னை கைது செய்யுங்கள் என்றும் கூறியதால் கிட்டத்தட்ட 12 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேமலதாவிடம் இருந்து எப்படி அபராதத்தை வசூலிப்பது என போலீசார் தீவிரமாக யோசித்து வருகின்றனர். இதுகுறித்து பிரேமலதாவிடம் கேட்டபோது, “ எனக்கு தெரிந்த வகையில் நான் ஏழைகளுக்காக போராடுகிறேன். ஒருவேளை என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினால் என்னிடம் அவர்கள் (ரெயில்வே அதிகாரிகள், போலீசார்) எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நீதிபதியிடம் கூறுவேன்” என்று கூறினார்.
Chennai Today News: Ask Vijay Mallya to cough up Rs 9000 crore before making me pay Rs 260 fine: Mumbai train passenger demands