விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிப்பில் நேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜில்லா திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளிவர இருக்கின்றது. தலைவா படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை போல இப்படத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக படக்குழுவினர் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்த சேலையூர் என்ற பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற பெயரில் சினிமா நிறுவனம் நடத்திவரும் நான், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா நடித்த “பகீரதா” என்ற படத்தை “ஜில்லா” என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட திட்டமிட்டிருந்தேன். இதற்காக ‘ஜில்லா’ என்ற பெயரை 2008ஆம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.
இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழும் பெற்றும் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில் விஜய் நடித்த படமும் “ஜில்லா” என்ற பெயரில் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிந்தேன். எனவே விஜய் நடித்த ஜில்லா படத்தை வெளீயிட தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் மனு காரணமாக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.