அசாம் மாநிலத்தில் ஆதிவாசி மக்கள் மீது போடோலாந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய எல்லையில் அமைந்துள்ள பூடான் மற்றும் மியான்மர் ராணுவத்தின் ஒத்துழைப்பை இந்தியா நாடியுள்ளது.
அசாமில் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி (எஸ்) என்ற தீவிரவாத அமைப்பு ஆதிவாசி மக்கள் மீது கொடூரமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதில், 70-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. அசாமில் 5,000 துணை ராணுவப் படையினர் இதற்காக இறக்கிவிடப்பட்டுளனர். மேலும் கூடுதல் வீரர்களை அனுப்ப ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அசாமின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் போடோலாந்து தீவிரவாதிகள் ஒளிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தீவிரவாதிகள் காட்டு வழியாக பூடான் மற்றும் மியான்மருக்கு தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பூடான் மற்றும் மியான்மர் ராணுவத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காக அந்நாடுகளுடன் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ப்ஆலோசனை நடத்தியிருப்பதாகக் கூறப்படு கிறது.
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பூடான் அரசுடன் ஏற்கெனவே பேசியிருப்பதாகவும் தீவிர வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க பூடான் உறுதியளித் துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.