அஸ்தம் பிறந்தது.. அத்தப்பூ மலர்ந்தது.. ஓண கொண்டாட்டம் தொடக்கம்!

onam-festival-in-india-2015

ஆவணி அஸ்தம் நட்சத்திரம் பிறந்ததை ஒட்டி கேரளாவிலும், குமரி மாவட்டம் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களிலும் திருவோண கொண்டாட்டம் தொடங்கியது. இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று திருவோணம். கேரள மாநில மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். காணம் விற்றாவது ஓணம் கொண்டாது என்பது ஓணம் பற்றிய பழமொழி. காணம் சிறிய தானியம். அதை விற்றாவது சிறிய அளவிலாவது ஓணம் கொண்டாட வேண்டும் என்பதுதான் பழமொழியின் பொருள்.

கேரளாவில் குறுநில மன்னனாக, வாய்மை தவறாமல் ஆட்சி செய்து வந்த மகாபலியை சோதிக்க விரும்பிய விஷ்ணு பகவான் வாமன அவதாரம் எடுத்து மன்னனிடம் சென்று மூன்று அடி நிலம் கேட்டார். தருகிறேன் என்று மன்னன் சொன்னதும் மலையாக வளர்ந்த விஷ்ணு முதல் அடியில் பூமி, இரண்டாவது அடியில் ஆகாயத்தை அளந்து விட்டு மூன்றாவது அடிக்கு நிலம் கேட்ட போது தனது தலையை காட்டி கொடுத்த வாக்கை காப்பாற்றினார் மகாபலி. பகவானிடம் கேட்டு பெற்ற வரத்தின் படி ஆவணி மாதம் திருவோண நாளில் மக்களை மகாபலி காண வருவதாக நம்பப்படுகிறது. இதற்காக ஆவணிஅஸ்தம் நாளில் தொடங்கி பத்து நாட்கள் ஓண கொண்டாட்டம் நடக்கிறது. நேற்று அஸ்தம் பிறந்தை ஒட்டி பத்மனாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் அமைத்து ஓணத்தை வரவேற்றனர். ஊஞ்சல் ஆடியும், பாட்டு பாடியும் ஓண கொண்டாட்டம் தொடங்கியது. இனி பத்து நாட்கள் கேரளாவிலும், அதனை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் இனி ஓணம் களை கட்டுவதை காண முடியும். ஓணத்தின் உச்சக்கட்டமாக வரும் 28ம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது. அன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையாகும்.

Leave a Reply