பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட அட்டாக் பாண்டி கைது.
மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ‘பொட்டு சுரேஷ்’ என்பவரது கொலை வழக்கில் கடந்த இரண்டு வருடங்களாக தேடப்பட்டு வந்த மதுரையை சேர்ந்த ரெளடி அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டார். தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அட்டாக் பாண்டி மும்பையில் நடமாடுவதாக வந்த தகவலை அடுத்து சமீபத்தில் மும்பை சென்ற தமிழக போலீஸார் அவரை இன்று மும்பையில் கைது செய்தனர்.
இன்று மும்பை புறநகர் பகுதியான வாஷியில் அட்டாக் பாண்டியை தமிழக போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்ததாகவும், இன்று அல்லது நாளை அவரை சென்னை கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் சார்பில் கூறப்படுகிறது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் அழகிரியின் வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷ் தென்மாவட்ட “அதிகார மையமாகவே’ வலம் வந்தார். மதுரை, சின்னசொக்கிக்குளத்தில் “ரியல் எஸ்டேட்’ அலுவலகத்தில்தான், அப்போது அனைத்து விவகாரங்களையும் மேற்கொள்வார். கடந்த ஆட்சியில், அமைச்சர்களே பயப்படும் அளவிற்கும், கலெக்டர்களுக்கு உத்தரவிடும் சக்தி வாய்ந்த நபராக வலம் வந்த இவர் கான்டிராக்ட் எடுப்பது தொடர்பான போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.