ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு அட்டர்னி ஜெனரல் முட்டுக்கட்டையா?
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அதற்கான அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் பாஜகவும் ஜல்லிக்கட்டுவை நடத்த தீவிர முயற்சி செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், கடந்த 30-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஆனால், அன்றைய கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதிக்கவில்லை என்றும் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது எனவும், மத்திய அமைச்சரவை பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்கள் ‘ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும்’ என்று கூறினார்களே தவிர அவசர சட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கலாமா? என்பது குறித்து அட்டார்னி ஜெனரலிடம் மத்திய அரசு கருத்து கேட்டதாகவும், அதற்கு அவர், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த மீண்டும் அனுமதிப்பது என்பது சுப்ரீம் கோர்ட் கடந்த 2014 மே மாதம் வழங்கிய தடை தீர்ப்பை மீறுவதாக அமைந்துவிடும் என்று அறிவுறுத்தியதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஜல்லிக்கட்டு நடப்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பான ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதுதான். ஆனால் அதற்கும் அட்டார்னி ஜெனரல் கருத்து முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளதால் ஜல்லிக்கட்டு இவ்வருடம் நடத்த அனுமதி கிடைக்காது என்றே டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றாது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதற்குள் அவசர சட்டம் இயற்றுவது சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது.
Chennai Today News: Attorney General advises to Government to don’t lift ban on Jallikattu?