பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேண்ட் வாட்சன் ஓய்வு
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் நேற்று தனது டுவிட்டரில், ‘”டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் சவாலாகத் திகழும் அளவுக்கு என்னிடம் மனோபலம் இல்லை. உத்தி ரீதியாகவும் வலுவாக இல்லை, எனவே ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்பதை முடிவு செய்தேன்” என்று பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2005ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஷேன் வாட்சன், அறிமுகமானார். இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3731 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 176. அதுமட்டுமின்றி 75 டெஸ்ட் விக்கெட்டுகளையும் ஷேன் வாட்சன் கைப்பற்றியுள்ளார். 3 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 45 கேட்ச்களை பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை பொறுத்தவரையில் குறைந்த ஸ்கோரில் ஒரே முறையில் அதிகம் ஆட்டமிழந்தால் அவர்களது கரியர் முடிவுக்கு வருவது வழக்கம், அந்த வகையில் இவரது டெஸ்ட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.