ஆஷஷ் தொடர்: தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஷ் தொடர் கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிராட் அவர்களின் அபார பந்துவீச்சினால் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் 18.3 ஓவர்களில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் ஒன்பது ஆஸ்திரேலிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதில் மூன்று பேர் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ரூட் அவர்களின் அபார சதத்தால் 391 ரன்களை பெற்றிருந்த நிலையில் டிக்ளே செய்தது. எனவே 331 ரன்கள் பின் தங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடி வருகிறது. இதுவரை 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் தொடரை இழந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.