கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் கிளைமாக்ஸ் போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டி பயங்கர விறுவிறுப்பாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எந்த பரபரப்பும் இன்றி மிக எளிதாக ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றியுள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பந்துவீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. 45 ஓவர்களில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர்.
கோப்பையை கைப்பற்ற 184 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே பின்ச் விக்கெட்டை பற்கொடுத்தாலும் அதன் பின்னர் களமிறங்கிய ஸ்மித், மற்றும் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 33.1 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
மைக்கேல் கிளார்க் 74 ரன்களும், ஸ்மித் 56 ரன்களும், வார்னர் 45 ரன்களும் எடுத்தனர். மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஃபால்க்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.