பென்சன் பணத்தை எடுக்க முடியாமல் கதறி அழுத முதியவர். கிரீஸ் நாட்டின் தொடரும் பரிதாபம்
கிரீஸ் நாட்டில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட நிதி நெருக்கடி தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அந்த நாட்டின் வங்கிகள் மூடப்பட்டதோடு, ஏ.டி.எம் மிஷின்களிலும் பணம் இல்லை. இதனால் தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தையே பொதுமக்கள் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
கிரீஸ் அரசு எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் தனது ஓய்வூதிய பணத்தை எடுக்க முடியாத ஒரு முதியவர் வங்கிக்கு வெளியே கதறி அழுது புரண்ட புகைப்படம் அண்மையில் ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டரில் வெளிவந்தது.
சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி இந்தப் படம் பல்வேறு நாடுகளின் ஊடகங்களிலும் வெளியானது. இந்தப் படத்தை பார்த்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவர், அந்த படத்தில் இருப்பவர் தனது தந்தையின் நண்பர் போல் இருப்பதை அறிந்து உடனடியாக இதுகுறித்து தனது தாயாரிடம் அவர் விசாரித்தார். அதில் அவர் அந்த புகைப்படத்தில் இருப்பவர் தனது தந்தையின் நண்பர் என உறுதியாகியது.
பின்னர் தனது தாயாரின் ஆலோசனையின்படி, அந்த முதியவருக்கு உதவுவதற்காக பணத்துடன் கிரீஸ் நாடு சென்று அவரை கண்டுபிடித்து பணத்தை கொடுத்து உதவியுள்ளார். மேலும் அவருடைய பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கி அதில் விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை செய்யலாம் என்றும் கூறியுள்ளார். இந்த மாபெரும் உதவியை செய்த அந்த ஆஸ்திரேலிய நபரின் பெயர் ஜேம்ஸ் கவுபோஸ் என்றும், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிபவர் என்றும் கூறப்படுகிறது.