தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்கள் நேற்று முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பல மடங்கு கட்டணங்களை உயர்த்தி வசூலிப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குட்பட்டுள்ளனர்.
பேருந்து ஸ்டிரைக் மற்றும் மழை ஆகிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஆட்டோக்களில் குறைந்த கட்டணமாக ரூ. 50 ஆகவும், ஷேர் ஆட்டோக்களில் ரூ. 20 ஆகவும் உயர்த்தப்பட்டு இருந்தது.
ரயில் மற்றும் பஸ் நிலையங்களின் வாசல்களில் ஆட்டோக்கள் பயணிகளுக்காக பேரணி போல் அணிவகுத்து காத்துக்கொண்டு இருந்தன. ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்ட இடத்துக்கு செல்வதற்கு கூட ஆட்டோ ஓட்டுநர்கள் ரூ.50 கட்டணமாக வசூலித்து வருகின்றனர். ஷேர் ஆட்டோக்களில் சாதாரண நாட்களில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல ரூ. 7 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஷேர் ஆட்டோ பயணி ஒருவர் நமது நிருபரிடம் கூறும்போது,’’ சென்னை கே.கே. நகரில் இருந்து தி.நகர் வர இதற்கு முன்பு ரூ.15 வசூலித்ததாகவும் தற்போது ஒரு நபருக்கு ரூ. 40 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று கூறினார். கையில் காசு இல்லாதவர்கள் வேறு வழியின்று பேருந்து வருமா? வராதா என்று காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பயணிகளில் தாங்கள் போக வேண்டிய இடத்துக்கு சென்றால் போதும் என்ற எண்ணத்தில் ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோக்களில் நெரிசலையும் பொறுத்துக் கொண்டு அதிக கட்டணத்தை கொடுத்துக்கொண்டும் பயணம் செய்து வருகின்றனர்.
கோடம்பாக்கம் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறும்போது,’’ பொதுவான நாட்களில் கோடம்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலை செல்ல ரூ.150 கேட்போம். ஆனால் நேற்று பஸ்கள் ஓடாத காரணத்தால் அண்ணா சாலை செல்லும் பயணிகளிடம் ரூ.300 வசூலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.