மீட்டர் போடாததால் அபராதம். எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

auto driverமீட்டர் போடாமல் ஓட்டி வந்த ஆட்டோக்களுக்கு நேற்று முன்தினம் முதல் அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த டிரைவர்கள், எழும்பூர் அருகே மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் மீட்டர் போடாத ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று முன் தினம் முதல் ஆட்டோக்களில் போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர். அரசின் விதிமுறைகளை பின்பற்றாத ஆட்டோக்களை பிடித்து போக்குவரத்து  போலீசார் பறிமுதல் செய்து வந்ததற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று சென்னை எழும்பூர் காந்தி இர்வின்  சாலையில் போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு என்பவர் அந்த வழியாக வந்த ஆட்டோக்களை மறித்து ஆய்வு மேற்கொண்டார். புளியந்தோப்பை சேர்ந்த சந்தானம் வந்த  ஆட்டோவில் மீட்டர் போடவில்லை. இதனால் அந்த ஆட்டோவுக்கு அபராதம் விதித்தார்.

 அதற்கு அந்த ஆட்டோ டிரைவர், ‘‘பயணிகள் மீட்டர் போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால்தான் மீட்டர்  போடவில்லை என்று கூறியும் அதை ஏற்காமல் அந்த ஆட்டோவுக்கு அபராதம் போக்குவரத்து ஆய்வாளர் விதித்துள்ளனர். இதனால் போக்குவரத்து போலீசாருக்கும் ஆட்டோ  டிரைவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் திரண்டுவந்து, போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம்  செய்ததோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர்  கிரி, எழும்பூர் உதவி கமிஷனர் பீர்முகமது ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்டு இருந்த ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  மறியலை கைவிட செய்தனர்

Leave a Reply