இந்திய ஆட்டோமொபைல் உலகம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில், அதிரடியான கார்களை அறிமுகப்படுத்தி, இந்தியா மீதுதான் உலகின் அத்தனை ஆட்டோமொபைல் கம்பெனிகளின் கவனமும் இருக்கிறது என்பதைப் புரியவைத்தது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ. புதுப் புது கார்களால் களை கட்டிய இந்தியாவின் உச்சபட்ச ஆட்டோமொபைல் திருவிழாவின் ஹைலைட்ஸ் இங்கே…
மிகவும் கனத்த மனதுடன்தான் இந்த முறை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துகொண்டது டாடா மோட்டார்ஸ். கடந்த இரண்டு ஆண்டுகளாக டாடாவிடம் இருந்து எந்தப் புதிய காரும் விற்பனைக்கு வரவில்லை. எல்லாமே அப்டேட்ஸ் மட்டுமே! கார்ல் ஸ்லிம், டாடா மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்ற பின்பு, முதல் முறையாக புதிய டிஸைன் கார்களை உருவாக்கி, ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தத் தயாராக இருந்தது டாடா. ஆனால், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ துவங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, கார்ல் ஸ்லிம் மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் எல்லோருக்குமே ஆச்சரியம் ஏற்படுத்தியது. டாடா கார்களா இவை என்று சொல்லும் அளவுக்குப் புதிய டிஸைனுடன் கார்களை அறிமுகப்படுத்தினாலும், பெரிய கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல் இதைச் செய்தது டாடா மோட்டார்ஸ். போல்ட், ஸெஸ்ட் கார்கள் மட்டும் அல்லாமல், அதிரடி கான்செப்ட் கார்களையும் அறிமுகப்படுத்தியது டாடா.
டாடா நெக்ஸான்
எக்கோஸ்போர்ட், மொபிலியோ கார்களைப் போன்று, இது டாடாவின் காம்பேக்ட் எஸ்யூவி. ஆனால், இது எக்கோஸ்போர்ட் போன்று பிரம்மாண்டமான எஸ்யூவியாக இல்லாமல், ஹேட்ச்பேக் காரை அப்படியே கொஞ்சம் உயரமாக்கியது போல இருக்கிறது. இத்தாலி, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள டாடாவின் டிஸைன் அணிகளால் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது நெக்ஸான். 2016-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவிருக்கும் நெக்ஸானின் கிரில் டிஸைனை ‘ஸ்மைலிங் கிரில்’ என்கிறது டாடா. ஆனால், காரின் பின்பக்க டிஸைன் மற்றும் உள்பக்க சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் கான்செப்ட் காருக்கும் விற்பனைக்கு வரவிருக்கும் காருக்கும் சம்பந்தம் இருக்காது என்றே தெரிகிறது. இந்த கான்செப்ட் காரில் பல மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.
ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் காரில் 1.2லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இது அதிகபட்சமாக 108 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. நெக்ஸான், 4 வீல் டிரைவ் சிஸ்டம்கொண்டது என்பதுதான் ஹைலைட்!
நானோ ட்விஸ்ட்
2008 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டாடாவின் ஷோ ஸ்டாப்பரான நானோ விற்பனைக்கு வந்ததும், அதன் கவர்ச்சிகள் அனைத்தையும் இழந்தது. விலை குறைந்த கார் என்பதைத் தாண்டி ஒரு முழுமையான காராக இல்லாமல் போனதுதான் நானோவின் பலவீனம். இப்போது ஒரு முழுமையான காராக மாற்றி, பவர் ஸ்டீயரிங்கையும் இதில் சேர்த்து நானோ ட்விஸ்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது டாடா. வெறும் பவர் ஸ்டீயரிங் மட்டும் அல்லாமல், காரில் முக்கிய மாற்றமாக பின்பக்கக் கதவைத் திறக்கும் வசதியையும் இதில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் டிக்கியில் பொருட்கள் வைக்கமுடியும். டிக்கியைத் திறக்கும் வகையில் வடிவமைத்ததன் மூலம் 600 கிலோ எடை கொண்ட நானோ, இப்போது கூடுதலாக 60 கிலோ அதிகரித்திருக்கிறது.
இந்த எடை மாற்றத்தின் மூலம் மைலேஜும் சின்ன அளவில் குறையும். மைலேஜில் மாற்றம் இருக்கும் என்பதால், பெட்ரோல் டேங்க்கின் கொள்ளளவை அதிகரித்திருக்கிறது டாடா. 15 லிட்டர் பெட்ரோல் டேங்க், இப்போது 25 லிட்டர் பெட்ரோல் டேங்க்காக மாறியிருக்கிறது.
நானோ ஆட்டோமேட்டிக்
நானோ ட்விஸ்ட்டைத் தவிர, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட நானோவையும் காட்சிக்கு வைத்து ஆச்சரியப்படுத்தியது டாடா. ஃபியட் நிறுவனத்தின் அங்கமான ‘மேக்னெட்டி மெரல்லி’ நிறுவனத்தின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸை நானோவில் பொருத்தியிருக்கிறது டாடா. தற்போது விற்பனையில் இருக்கும் நானோவில் வெறும் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவில் இதிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட இருக்கிறது. 2015-ம் ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கும் நானோ ஆட்டோமேட்டிக்தான், உலகின் விலை குறைவான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட காராக இருக்கும்.
கனெக்ட் நெக்ஸ்ட்!
காருக்குள் பல புதுமையான பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது டாடா. அந்தச் சிறப்பம்சங்கள் அதிகம் கொண்ட காராக, ‘கனெக்ட் நெக்ஸ்ட்’ எனும் கான்செப்ட் காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. முழுக்க டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இந்த காருக்குள்ளேயே வை-ஃபை வசதி, வீடியோ ஸ்டீரீமிங், வீடியோ ஸ்கிரீன்ஸ் எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் விரைவில் மற்ற டாடா கார்களில் அறிமுகமாகும்.
ஃபோர்டு ஃபிகோ செடான்
2015 ஃபிகோ மாடலை ஃபோர்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபிகோ செடானை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தியது. ஸ்விஃப்ட் டிசையர், ஹோண்டா அமேஸ், டாடா ஸெஸ்ட் கார்களுடன் போட்டி போட இருக்கும் இந்த மிட் சைஸ் செடான் கார், நான்கு மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர்தான் ஃபிகோ என்று பழைய பெயராக இருக்கிறது. மற்றபடி இது எக்கோஸ்போர்ட், ஃபியஸ்ட்டா தயாரிக்கப்படும் புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கும் கார். வரப்போகும் புதிய ஃபிகோவில் இடம் பிடிக்கும் ஆஸ்ட்டன் மார்ட்டின் ஸ்டைல் கிரில்லைக் கொண்டிருக்கிறது ஃபிகோ செடான்.
காரின் உள்பக்கத்தை வெளியே காட்டவில்லை ஃபோர்டு. ஆனால், புதிய ஃபியஸ்டா மற்றும் எக்கோஸ்போர்ட்டின் உள்பகுதி போன்றேதான் இந்த காரும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஃபிகோவில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1 லிட்டர் எக்கோபூஸ்ட் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது ஃபிகோ செடான்.
இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பதுதான் எல்லோரது கேள்வியும். பதில்: இது அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ஃபிகோ விற்பனைக்கு வரும். அதன்பிறகுதான் இந்த ஃபிகோ செடான் விற்பனைக்கு வரும். இது விற்பனைக்கு வரும்போது ஃபியஸ்டா கிளாஸிக் விற்பனையில் இருந்து நிறுத்தப்படும். ஃபியஸ்டா கிளாஸிக் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் காலம் காத்திருந்தால், இந்த காரை அதிக டிஸ்கவுண்ட்டுடன் வாங்க முடியும்.
புதிய ஃபியஸ்டா
ஆஸ்ட்டன் மார்ட்டின் ஸ்டைல் கிரில் கொண்ட புதிய ஃபியஸ்டாவையும் அறிமுகப்படுத்தியது ஃபோர்டு. முன்பக்க கிரில் மட்டும் அல்லாமல், பின்பக்க விளக்குகள் மற்றும் அலாய் வீல் டிஸைனையும் மாற்றியிருக்கிறது ஃபோர்டு. காரின் உள்பக்கமும் இரட்டை வண்ண தீமுடன் டிஸைன் செய்யப்பட்டிருப்பதோடு, வைஃபை, ‘ஃபோர்டு வாய்ஸ் ஸிங்க்’ உள்ளிட்ட வசதிகளையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஃபியஸ்ட்டா விரைவில் விற்பனைக்கு வரும்.
புதிய ஃபியஸ்டா தவிர்த்து சன் ரூஃப் வசதிகொண்ட எக்கோஸ்போர்ட்டையும் காட்சிக்கு வைத்திருந்தது ஃபோர்டு.
டட்சன் ரெடி கோ
டட்சன் பிராண்டில் இருந்து விற்பனைக்கு வரப்போகும் மூன்றாவது கார் என்ன என்ற சஸ்பென்ஸை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் உடைத்தது நிஸான். மாருதி ஆல்ட்டோவுடன் போட்டி போடப் போகும் இந்த கார், டட்சனின் வழக்கமான கிரில்லையே கொண்டிருக்கிறது. ஆனால், ஹெட்லைட்ஸ் மற்றும் பானெட் மிகவும் உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சின்ன எஸ்யூவி போன்று வடிவமைக்கப்பட்டிருந்த இந்த கான்செப்ட் கார் போலவேதான் விற்பனைக்கு வரப் போகும் காரும் டிஸைன் செய்யப்பட்டிருக்கும் என உறுதிசெய்திருக்கிறது நிஸான்.
800 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இந்த ரெடி-கோ காரில் பொருத்தப்பட்டிருக்கும். லிட்டருக்கு 20 கி.மீ வரை மைலேஜ் தரக்கூடிய வகையில் இதன் இன்ஜின் ட்யூன் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறது நிஸான் ரிஸர்ச் அண்டு டெவலப்மென்ட் டீம். மாருதி ஆல்ட்டோ 800 காரைவிடவும் ரெடி-கோவின் விலை குறைவாக இருக்கும் என்பதுதான் ஹை-லைட்!
‘கோ’ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் எம்யூவி காரான 7 சீட்டர் ‘கோ ப்ளஸ்’ காரையும் காட்சிக்கு வைத்திருந்தது நிஸான். கோ-ப்ளஸ் மே மாதத் துவக்கத்தில் விற்பனைக்கு வரும்.
ஃபியட்
”ஃபியட் அரங்கத்தில் கால்பந்து விளையாடும் அளவுக்கு இடம் காலியாக இருக்கிறது” என்று எல்லோரும் கமென்ட் அடிக்கும் அளவுக்கு காலியாக இருந்தது. கடைசி நேரத்தில் ஜீப் பிராண்டின் அறிமுகம் தள்ளிப் போனதால் ‘ஜீப்’ வாகனங்கள் எக்ஸ்போவில் காட்சிக்கு வைப்பதும் நிறுத்தப்பட்டது. ரூபாயின் மதிப்பு சரிவதாலும், ஏற்றுமதி வரி அதிக அளவில் இருப்பதாலும் ‘ஜீப்’ வாகனங்களின் விலையைக் குறைவாக நிர்ணயிக்க முடியாது எனச் சொல்லி ஜீப் பிராண்டின் வருகைக்குத் இடைக்காலத் தடை போடப்பட்டிருக்கிறது.
ஃபியட் அவென்ச்சுரா
அவென்ச்சுராவை நவீன நகர கார் என்று அடையாளப்படுத்துகிறது ஃபியட். புன்ட்டோவுக்கு அப்படியே கொஞ்சம் முரட்டு லுக் கொடுத்தால், அதுதான் அவென்ச்சுரா. இது 4 வீல் டிரைவ் கொண்ட ஆஃப் ரோடர் கார் இல்லை என்றாலும் எஸ்யூவி லுக் கொடுப்பதற்காக 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுடன் மிக உயரமாக வடிமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, எஸ்யூவி கார்கள் போன்று ஸ்பேர் வீலும் பின்பக்கக் கதவில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பேர் வீல் கதவுக்கு வெளியே வந்துவிட்டதால், டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது அவென்ச்சுரா. விலை 5 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும். டீசல் இன்ஜின் மட்டும் அல்லாமல் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலும் அறிமுகப்படுத்தப்படலாம்.
ஃபியட் அபார்த் 500
ஃபியட்டின் சிறிய பெர்ஃபாமென்ஸ் கார்களான அபார்த் கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறார்கள். முதல் அபார்த் காராக ‘அபார்த் 500’ மாடல் விற்பனைக்கு வருகிறது. 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இதன் அதிகபட்ச சக்தி 137bhp. சின்ன கார் ஆனால், அதிக பவர் என்பதால், பெர்ஃபாமென்ஸில் பறக்கும் காராக இருக்கும் அபார்த் 500. ஜூன் – ஜூலை மாதவாக்கில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கார், இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த காரின் தயாரிப்பு இந்தியாவிலேயே துவங்கும்.
செவர்லே ஆட்ரா
4 மீட்டர் எஸ்யூவிகளின் சீஸன் என்பதால், செவர்லே நிறுவனமும் 4 மீட்டர் செவர்லே ஆட்ரா காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. ஆட்ரா என்றால், சமஸ்கிருதத்தில் ‘கல்’ என்று அர்த்தமாம். கல் போன்று ஸ்ட்ராங்கான கார் என்று சொல்லவே இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தோம் என்கிறது ஜெனரல் மோட்டார்ஸ். கான்செப்ட் காரான இது, முழுக்க முழுக்க பெங்களூருவில் உள்ள செவர்லே இந்தியா டிஸைன் சென்டரில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது உயரமான கார் இல்லை. ஆனால், பெரிய டி-பில்லரும் அகலமான ஷோல்டர் லைனும் இதை மிகவும் உயரமான கார் போலக் காட்டுகிறது. இந்த டிஸைன் கான்செப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு வர நீண்ட காலம் பிடிக்கும். ஆனால், இதன் டிஸைன் சிறப்பம்சங்கள் மற்ற புதிய செவர்லே கார்களில் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்ஸென்ட்
2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாயின் நாயகன் எக்ஸ்ஸென்ட். முன்பு ஆக்ஸென்ட் என்ற பெயரில் மிட் சைஸ் செடான் காரை விற்பனை செய்துவந்த ஹூண்டாய், அதன் பாப்புலாரிட்டி காரணமாக புதிய காருக்கு எக்ஸ்ஸென்ட் எனப் பெயர் சூட்டியிருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் செடான் கார்களில் 81 சதவிகிதம் கார்கள் மிட் சைஸ் கார்கள்தான். இதில் மாருதி ஸ்விப்ஃட் டிசையரும் ஹோண்டா அமேஸும்தான் அதிகம். இந்த மார்க்கெட்டைப் பிடிக்கவே எக்ஸ்ஸென்ட்டை அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய்.
கிராண்ட் ஐ10 காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த காரின் விற்பனை, மார்ச் மாதம் முதல் துவங்குகிறது. காரின் முன்பக்கத்தைப் பொறுத்தவரை பெரிய 15 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டிருப்பதைத் தாண்டி கிராண்ட் ஐ10 காருக்கும் எக்ஸ்ஸென்ட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காரின் பின் பக்கமும் அழகாக இருப்பதோடு, டிக்கிக்குள் இடவசதியும் அதிகமாகவே இருக்கிறது. அதிக சிறப்பம்சங்கள் கொண்ட கார் என்பதையே முக்கிய விளம்பர யுக்தியாக வைத்திருக்கும் ஹூண்டாய், இதிலும் பல சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இரட்டைக் காற்றுப் பைகள், ஏபிஎஸ் பிரேக், பின்பக்க ஏ.சி வென்ட், பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் கேமரா, 1 ஜிபி ப்ளூ-டூத் ஆடியோ சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி எனப் பல வசதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
டேஷ்போர்டு மற்றும் கியர் லீவரில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே கிராண்ட் ஐ10 காரில் இருந்து இடம் மாறியிருக்கிறது. தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் வைக்க ஏராளமான இடவசதி செய்யப்பட்டுள்ளது. பின் இருக்கைகளைப் பொறுத்தவரை கால்களை நீட்டி மடக்கி உட்கார அதிக இடவசதி இருக்கிறது. அதேபோல், அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ஹெட்ரெஸ்ட்டும் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், காரின் அகலம் குறைவு என்பதால், பின் இருக்கையில் இரண்டு பேரே வசதியாக உட்கார முடியும்.
கிராண்ட் ஐ10 காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.1 லிட்டர் டீசல் இன்ஜின்தான் எக்ஸ்ஸென்ட் காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹூண்டாய் ஐ20 காரில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் வராது என்பதுதான் இதன் மிகப் பெரிய மைனஸ். ஹோண்டா அமேஸ் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் பவர்ஃபுல்லாக இருக்க, இதில் வெறும் 1.1 லிட்டர் டீசல் இன்ஜின் மட்டுமே என்பது எந்த அளவுக்கு எடுபடும் எனத் தெரியவில்லை. பெட்ரோல் இன்ஜின்கொண்ட மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷனும் உண்டு.
ஹோண்டா அமேஸ், ஸ்விஃப்ட் டிசையரைவிட இதன் விலையைக் குறைத்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஹுண்டாய். இதன் விலை 5.5 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
பியாஜியோ என்டி3
பியாஜியோ நிறுவனம் என்டி3 எனும் தனது புதிய சின்ன கான்செப்ட் காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது. 2016-ம் ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த காரில் 230 சிசி மற்றும் 350 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். எடை குறைவான மிகவும் சின்ன காரான பியாஜியோ என்டி3 காரின் அதிகபட்ச வேகம், மணிக்கு 80 கி.மீ. இது லிட்டருக்கு 30 கி.மீ வரை மைலேஜ் தரும் என்கிறது பியாஜியோ.
மாருதி சுஸ¨கி சியாஸ்
செலெரியோவின் அறிமுகத்தைத் தாண்டி சுஸ¨கியின் ஒரே அறிமுகம் இந்த சியாஸ் கான்செப்ட் கார்தான். அடுத்த தலைமுறை எஸ்எக்ஸ்-4 காரான சியாஸ், புதிய டிஸைன் கான்செப்ட்டின்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அகலமான க்ரில், நீளமான ஹெட்லைட்ஸ் என ஸ்போர்ட்டி டிஸைனைக் காணமுடிகிறது. 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது.
மாருதி எஸ்எக்ஸ்-4 க்ராஸ்
ரெனோ டஸ்ட்டருக்குப் போட்டியாக மாருதியின் புதிய எஸ் ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கும் கார்தான் எஸ்எக்ஸ்-4 க்ராஸ். அதிக இடவசதி மற்றும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட காராக இதை அறிமுகப்படுத்த இருக்கிறது மாருதி. 4 வீல் டிரைவ் ஆப்ஷன்கொண்ட கார் என்பதுதான் இதன் முக்கிய சிறப்பம்சம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவிருக்கிறது எஸ்எக்ஸ்-4 க்ராஸ்.
ஸ்கோடா யெட்டி
நாங்களும் இருக்கோம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், ஸ்கோடாவும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சூப்பர்ப் மற்றும் யெட்டி கார்களை அறிமுகப்படுத்தியது. ‘இதில் என்ன புதுசு’ என்று கேட்டால், ஸ்கோடா இன்ஜினீயர்கள் பல புதிய அம்சங்களைச் சொல்கிறார்கள். ஆனால், வெளியில் இருந்து பார்த்தால் பழைய யெட்டி, சூப்பர்ப் காருக்கும் புதியவற்றுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. ஸ்கோடாவின் புதிய டிஸைன் தீம்படி யெட்டியில் பட்டர்ஃபிளை தீமில் கிரில் டிஸைனை வடிவமைத்திருக்கிறது ஸ்கோடா. பம்ப்பர் மற்றும் காரின் பக்கவாட்டில் கறுப்பு வண்ண பிளாஸ்டிக் பட்டை எக்ஸ்ட்ராகவாகப் பொருத்தப்பட்டுள்ளது. 2 லிட்டர் இன்ஜின் கொண்ட யெட்டி இரண்டு வகையான பவர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும். 108 bhp சக்திகொண்ட மாடல் 2 வீல் டிரைவ் ஆப்ஷனுடன், 138 bhp சக்திகொண்ட மாடல் 4 வீல் டிரைவ் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வரும். புதிய யெட்டி இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும்.
ஹோண்டா
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் சூப்பர் ஸ்டார், ஹோண்டாதான். புத்தம் புதிய கார்களை வரிசை கட்டி அறிமுகப்படுத்தியது ஹோண்டா.
ஹோண்டா மொபிலியோ
மே மாதம் முதல் விற்பனைக்கு வரவிருக்கும் மொபிலியோ காரை, முதன்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஹோண்டா. 7 சீட்டர் காரான மொபிலியோவில் இடவசதி எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் எல்லோரும் துடித்தார்கள். உண்மையிலேயே அதிக இடவசதி கொண்ட காராகவே இருக்கிறது மொபிலியோ. ஆனால், பிரியோ காரில் இருக்கும் அதே டேஷ்போர்டும் முன்பக்க ஒற்றை சீட்டும் பாராட்டும் வகையில் இல்லை. ஹோண்டா சிட்டியில் இருக்கும் 1.5 லிட்டர் 117 bhp சக்திகொண்ட பெட்ரோல் இன்ஜினும், 100bhp சக்திகொண்ட டீசல் இன்ஜினும் மொபிலியோவில் பொருத்தப்பட்டுள்ளது. 7 லட்சம் ரூபாயில் இருந்து மொபிலியோவை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா.
ஹோண்டா ஜாஸ்
கடந்த ஆண்டு துவக்கத்தில் ஜாஸின் விற்பனையை நிறுத்திய ஹோண்டா இந்த ஆண்டு இறுதியில் புதிய ஜாஸை விற்பனைக்குக் கொண்டுவருகிறது. அமேஸ் காருக்கும், பிரியோ காருக்கும் இடையில் இதனை ஹோண்டா ஃபிட் செய்யும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இதன் விலை ஸ்விஃப்ட் மற்றும் ஐ20 கார்களைவிடவும் அதிகமாக இருக்கும்.
ஹோண்டா எக்ஸ்எஸ்-1
விற்பனைக்கு வருமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால், ஹோண்டா அரங்கத்தில் கூட்டம் கூட்டிய கார் இந்த கான்செப்ட் கார்தான். பிளேடு போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் ரியர் வியூ கண்ணாடிகள், விற்பனைக்கு வரப்போகும் காரில் இதேபோல் இருக்குமா என்பது சந்தேகமே! டொயோட்டா இனோவா அளவுக்கு நீளம்கொண்ட பெரிய காரான இதில், சி வடிவில் பின்பக்க விளக்குகளை வடிவமைத்திருக்கிறது ஹோண்டா. காருக்கு உள்ளே ஃப்ரேமே இல்லாத சென்டர் ஸ்கிரீன்தான் செம ஹைலைட்!
ஃபோக்ஸ்வாகன் டைகுன்
ஃபோர்டுக்கு எக்கோஸ்போர்ட் என்றால், ஃபோக்ஸ்வாகனுக்கு டைகுன். 2016-ம் ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கும் டைகுனை புதிய டிஸைன் தீமின்படி வடிமைத்திருக்கிறார்கள். அகலமான பெரிய ஹெட்லைட்ஸ், சின்ன கிரில், எஸ்யூவி கார்களுக்கே உரிய வகையில் முன்பக்க பிளாஸ்டிக் பட்டை என பிரம்மாண்டமாகவே இருக்கிறது டைகுன். மற்ற மினி எஸ்யூவிக்கள் போலவே ஸ்பேர் வீலை பின்பக்கக் கதவிலேயே பொருத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். பின் பக்கத்தில் கண்ணாடிப் பகுதியை மட்டும் தனியாகத் திறக்க முடியும்.
ஸ்மார்ட் போன்களை அடிப்படையாகக் கொண்டு காரின் உள்பக்கம் டிஸைன் செய்யப்பட்டுள்ளது என்கிறது ஃபோக்ஸ்வாகன். பட்டன்களைக் குறைத்துவிட்டு டேஷ்போர்டில் டச் ஸ்கிரீனே பிரதானமாக வைக்கப்பட்டுள்ளது. 108 bhp சக்திகொண்ட டைகுன், வெறும் 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பென்ஸ் ஜிஎல்ஏ
ஜிஎல்ஏ கான்செப்ட் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருந்த பென்ஸ் நிறுவனம், கடைசி நேர மாற்றங்களால் உண்மையான ‘புரொடக்ஷன் ரெடி’ காரையே காட்சிக்கு நிறுத்தியது. டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரவிருக்கும் ஜிஎல்ஏ, ஆடி க்யூ-3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 கார்களுடன் போட்டி போட இருக்கும் சின்ன க்ராஸ் ஓவர் கார். ஏ கிளாஸ் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால், காருக்கு உள்ள கிட்டத்தட்ட ஏ-கிளாஸ் வசதிகள்தான். 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.1 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது பென்ஸ் ஜிஎல்ஏ.
பிஎம்டபிள்யூ ஐ8
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் முதல் நாளான மீடியா தினம் அன்று கடைசியாக நடைபெற்ற நிகழ்ச்சி பிஎம்டபிள்யூவின் கார் அறிமுக நிகழ்ச்சி. பொதுவாக, கடைசி நிகழ்ச்சியின்போது கூட்டம் இருக்காது என்பதுதான் வழக்கம். ஆனால், இந்திய பத்திரிகையாளர்கள் மட்டும் அல்ல… ஜப்பான், கொரியா, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இருந்து வந்திருந்த அத்தனை பத்திரிகையாளர்களும் ஃபுல் அட்டென்டன்ஸ் போட்டு பிஎம்டபிள்யூ நிகழ்ச்சிக்காகக் காத்திருந்தனர். காரணம், சச்சின் டெண்டுல்கர். பாரத ரத்னா விருது வாங்கிய கையோடு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு வந்திருந்த சச்சின் டெண்டுல்கர், பிஎம்டபிள்யூ ஐ8 காரை அறிமுகப்படுத்தினார். பிஎம்டபிள்யூவின் ‘கார் ஆஃப் த ஷோ’ ஐ8 கார்தான். ஹைபிரிட் காரான ஐ8, இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது. விலை 1.5 கோடி. 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.4 விநாடிகளில் கடந்துவிடும் இதன் டாப் ஸ்பீடு, மணிக்கு 250 கி.மீ. இந்த வேகத்துக்குக் காரணம், 96 கிலோவாட் திறன்கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் முன்பக்க வீல்களுக்கு 128.7bhp சக்தியையும் 1.5 லிட்டர் திறன்கொண்ட பெட்ரோல் இன்ஜின் 228 bhp சக்தியை பின் வீலுக்கும் கடத்துகிறது. ஒட்டுமொத்தமாக, காரின் பவர் 357 bhp சக்தி என்பதால், பெர்ஃபாமென்ஸில் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கலாம். இது அதிகபட்சமாக 40 கி.மீ வரை மைலேஜ் (எலெக்ட்ரிக் மோட்டாரையும் சேர்த்து) தரும் என்கிறது பிஎம்டபிள்யூ.
அறிமுக விழா முடிந்து பத்திரிகையாளர்கள் எல்லோரும் கலைந்த பிறகு, கொஞ்சம் நேரம் மறைந்திருந்த சச்சின் டெண்டுல்கர், மீண்டும் வந்து காரைப் பார்வையிட்டார். தனது மேனேஜரையும் காரில் உட்கார்ந்து பார்க்கச் சொன்னார் சச்சின். அநேகமாக பிஎம்டபிள்யூ ஐ8 காரின் முதல் வாடிக்கையாளர் சச்சினாகத்தான் இருக்கும்.
ரேஞ்ச்ரோவர் எல்டபிள்யூபி
ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் அரங்கத்தின் முக்கால்வாசி இடத்தை ஆக்கிரமித்திருந்தது ரேஞ்ச்ரோவர் எல்டபிள்யூபி. லாங் வீல்பேஸ் என்பதன் சுருக்கம்தான் எல்டபிள்யூபி. சாதாரண ரேஞ்ச்ரோவர் மாடலின் வீல்பேஸை அப்படியே அதிகரித்து இந்த காரை டிஸைன் செய்திருக்கிறது லேண்ட்ரோவர் நிறுவனம். லிமோஸின் கார் போல இருக்கும் இதன் 5 லிட்டர் வி8 இன்ஜின், அதிகபட்சம் 503 சக்தியை வெளிப்படுத்தும். இதன் விலை சென்னையில் 3.5 கோடி ரூபாயைத் தாண்டும்.