சாலை விபத்துகளால் ஏற்படும் அவலங்களை விவரிக்கிறார் நகைச்சுவை நடிகர் ஜெகன்.
வாகனத்தில் சென்றபடியே செல்போன் பேசுவது எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்? சாலை விதிகளை மதிக்காமல் பயணிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எளிய நடனத்தின் மூலம் விளக்குகிறார்கள். சக்கர நாற்காலிகளில் அழைத்து வரப்படும் ஊனமுற்றவர்கள் தங்களுக்கு விபத்து நடந்த சூழல், ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது என விவரிக்கிறார்கள்.
கேட்டவுடன் பகீர் என்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் இப்படி ஆகிவிடக் கூடாது என்று தோன்றுகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஒன்றில், கோவை ஃபுரூக்பீல்ட்ஸ் மாலில் நடந்த அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டதோடு, விழிப்புணர்வையும் பெற்றார்கள்.
கைகோத்த மருத்துவர்கள்
சாலை விபத்துகள், பணியிட விபத்துகளால் பலரும் காயமடைந்து நிரந்தரமாகச் சக்கர நாற்காலிகளில் வாழ்க்கையைக் கழிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இதைக் குறைக்கும் வகையில் சாலை, பணியிடங்களில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விபத்துகளைத் தவிர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது கோவையில் உள்ள அமிஷ் (AMISH – Awareness Movement for Head and Spine injuries). இந்த அமைப்பை நடத்துபவர்கள் மருத்துவர்கள். குறிப்பாக ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் எனப்படும் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள்.
ஒரே மாதத்தில் சாலை விபத்துகள் குறித்து 30 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வெவ்வேறு இடங்களில் இந்த அமைப்பு நடத்தியிருக்கிறது. நேரடி பிரச்சாரம், குறும்படங்கள், வீதி நாடகங்கள் எனப் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் இந்த அமைப்பு, ‘பிளாஷ் மாப்’ எனும் திடீர் கவன ஈர்ப்பு நடனத்தை நடத்தியும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.
5 நிமிடங்களுக்கு ஒருவர்
விபத்தில் பாதிக்கப்பட்டு எங்களிடம் அன்றாடம் அறுவை சிகிச்சைக்கு வருபவர்களின் துயரத்தைப் பார்த்தே இந்த அமைப்பைத் தொடங்கினோம் என்கிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி. பாலமுரளி. அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அதிர்ச்சி தரக்கூடியவை:
இந்தியாவில் 5 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் மரணமடைகிறார். இதுவே 2020-ம் ஆண்டில் 3 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்கும் நிலை ஏற்படலாம். தற்போது சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவோர் அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா. ஆனால், நிலைமை மாறவில்லை என்றால், 2040-ல் உலக அளவில் இந்தியாதான் இந்த வகையில் முதல் இடத்தில் இருக்கும் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
தற்போது முதுகுத் தண்டுவடத்தில் காயமடைவோர் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. தலை, முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டுப் பிழைத்திருப்பதால், உயிரோடு இருந்தும் பிரயோஜனம் இல்லை.
அலட்சியத்தால் பலி
சாலைகளின் தரம், சீட் பெல்ட், ஹெல்மெட் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் பயணிப்பது, நமக்கு எப்படி விபத்து நடக்கும் என்பது போன்ற அலட்சியமே பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கியக் காரணம்.
நாட்டில் ஒரு நாளைக்கு 480 பேர் சாலை விபத்தில் இறக்கிறார்கள். இது ஒரு போயிங் விமானம் தரையில் மோதி, அத்தனை பேரும் பலியாவதற்குச் சமம். எப்போதாவது ஒரு விமானம் விபத்துக்கு உள்ளானால் எவ்வளவு பதறுகிறோம். அதே அளவு அக்கறையைத் தினசரிச் சாலை விபத்தில் பலியாவோர் மீது செலுத்துகிறோமா? தேசிய அளவில் சாலை விபத்துகளில் பலியாகிறவர்கள், பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் வரிசையில் கோவை 5-வது இடத்தில் வருகிறது.
இதற்கு முந்தைய இடத்தில் சென்னை இருந்தாலும், பரப்பளவு, மக்கள் தொகையை ஒப்பிட்டால் கோவையில் நடக்கும் விபத்துகளைப் பார்த்தால் மலைப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அதிலும் இங்கே விபத்தில் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் வெறும் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான மாதச் சம்பளம் பெறுபவர்கள். தொடர்ந்து இத்தகைய இளைஞர்களை இழந்துகொண்டே இருந்தால், இன்னும் சில ஆண்டுகளில் நமது நாட்டின் உழைப்போர் விகிதம் 60 சதவீதம் குறைந்து போகும்.
இவ்வாறு டாக்டர் பாலமுரளி தெரிவித்தார்.
இந்த விஷயங்களைப் பற்றி அமிஷ் அமைப்பின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்ஸி டிரைவர்கள், போலீஸார், ஐ.டி. துறை இளைஞர்கள் எனப் பல தன்னார்வலர்கள் இவர்களுடைய விழிப்புணர்வுப் பணியில் ஈடுபடுகிறார்கள். விபத்து நடக்காமல் இருப்பதற்கு என்னென்ன வழிகள், விபத்து நடந்துவிட்டால் முதலுதவி சிகிச்சை எப்படிச் செய்ய வேண்டும், 108 உள்பட ஆம்புலன்ஸ்களை எப்படி அழைப்பது எனப் பல்வேறு விஷயங்கள் கற்றுத் தரப்பட்டு விழிப்புணர்வு பரப்பப்படுகிறது.