தூத்துக்குடி : தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க ஆயுத கப்பல் குறித்து யூ பிரிவு போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடியிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் நவீன ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்த ‘சீமேன் கார்டு ஓகியா” என்ற அமெரிக்காவின் ‘அட்வென் போர்ட்” நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலை கடந்த 11ம் தேதி இந்திய கடலோர காவல்படையினர் சுற்றிவளைத்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து நாயகிதேவி கப்பலின் கமாண்டன்ட் நரேந்தர் தருவைகுளம் மரைன் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. கியூ பிரிவு டிஎஸ்பி சுலோசனா பகவதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கியூ பிரிவு போலீசாரிடம் மரைன் போலீசார் ஒப்படைத்தனர். நேற்று காலை அமெரிக்க கப்பல் குறித்து விசாரணை நடத்த கியூ பிரிவு எஸ்.பி. பவானீஸ்வரி சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து ஸ்பிக் விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் துறைமுகத்தின் 2வது தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பலில் தங்க வைக்கப்பட்டுள்ள கேப்டன் டட்க்னிக் வாலென்டின் உள்ளிட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இதுவரை அந்த கப்பல் பயணம் செய்த இடங்கள், அதில் உள்ள ஆயுதங்கள், அவை வந்த விதம் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
கப்பலில் உள்ள வயர்லெஸ் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட சேட்டிலைட் மூலம் தொடர்பு கொள்ள உதவும் நவீன கருவிகள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர். கப்பலில் உள்ள ஜிபிஎஸ் கருவியில் 2 மாத பயண விபரங்கள் பதிவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கப்பலில் இருப்பவர்கள் சிதைத்து விடாமல் ‘பேக்அப்‘ செய்து அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும் கப்பலில் உள்ள அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ‘சீமேன்கார்டு‘ கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைந்த நாள் முதல் அதலிருந்த மாலுமிகள் தொடர்பு கொண்ட நபர்கள், பயண தேதி, பயணம் செய்த கடல் வழி, பரிமாறிக்கொண்ட வயர்லெஸ் தகவல் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. மேலும் கப்பலில் உள்ள துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை மீட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கப்பலுக்கு டீசல் சப்ளை செய்த நபர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு உதவியாக மெர்க்கன்டைல் மரைன் டிபார்ட்மென்ட் உதவியை நாடவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வெளியேற தடை : ஆயுதங்களுக்கான ஆவணங்களில் சர்வதேச கடல் எல்லை பகுதிகளில் பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் இருந்துள்ளன. இந்த ஆயுதங்களை இந்திய கடல் எல்லைக்குள் பயன்படுத்துவதற்கான உரிமம் அட்வென்போர்ட் மூலம் பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் எஸ்.பி. பவானீஸ்வரி விசாரணை நடத்தினார். இது குறித்து அந்நிறுவனத்தின் துபாய் கிளையின் பிரதிநிதியான கொச்சியை சேர்ந்த சாக்கோ தாமஸை அழைத்து விசாரித்தார்.
கப்பல் தரப்பினர் சமர்ப்பித்துள்ள பல ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு திருப்தியளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணையை தொடர வேண்டியிருப்பதால் கப்பலை வெளியேற அனுமதிக்க வேண்டாம் என கடலோர காவல்படை கமாண்டென்ட் மற்றும் துறைமுக போக்குவரத்து மேலாளர் ஆகியோரிடம் எஸ்.பி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். இன்றும் தொடர்ந்து அவர் விசாரணை நடத்துகிறார்.