கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
மதுரையின் முக்கிய விசேஷங்களில் ஒன்றான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்றது. அழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கியபோது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷமிட்டனர்.
முன்னதாக நேற்று முன் தினம் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் சுந்தர ராஜப் பெருமாள் பல்லக்கில் புறப்பட்டார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை மூன்றுமாவடிக்கு வந்தார். அப்போது எதிர்சேவை நடைபெற்றது. பின்னர் கண்டாங்கி பட்டு, வேல் கம்பு ஆகியவற்றுடன் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து புதூர், ஆட்சியர் குடியிருப்பு வழியாக பிற்பகல் டீன் குடியிருப்புப் பகுதிக்கு கள்ளழகர் வந்தார். இதையடுத்து மாலை மண்டகப்பட்டியில் எழுந்தருளினார். இரவு பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நள்ளிரவு கருப்பணசாமி திருக்கோவில் அருகே ஆயிரம்பொன் சப்பரத்தில் அருள்பாலித்தார்.
பின்னர் கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வழியாக இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். அவரை வீரராகவப் பெருமாள் எதிர் நின்று வரவேற்றார். பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினால், விவசாயம் செழிக்கும் என்பது நம்மவர்களின் நம்பிக்கை. பக்தர்கள் வருகையை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன.