சென்னை: திருவிடைமருதுார் அருகேயுள்ள, கோதண்டராம சுவாமி கோவிலில், மராட்டியர் கால ஓவியங்கள் அழிந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார் அருகே, குறிச்சி என்ற கிராமத்தில், கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின், ராமர் சன்னிதி முன் மண்டபத்தில், மராட்டியர் காலத்தில், வரையப்பட்ட அழகிய ஓவியங்கள் உள்ளன. தற்போது அந்த ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளதாக, பக்தர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது; அறநிலையத் துறையின் கீழ் உள்ள பல கோவில்களில் பழமையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை, போதிய பராமரிப்பு இன்றி அழியும் அபாயத்தில் உள்ளது. கோதண்டராமசுவாமி கோவிலில், மராட்டியர் காலத்தில் வரையப்பட்ட, ராமாயண ஓவியங்கள் அதிகளவில் உள்ளன. அவை தற்போது, அழியும் நிலையில் உள்ளதால், தொல்லியல், வேதியியல் துறை நிபுணர்கள் மூலம் புதுப்பிக்க வேண்டும்.
இந்த கோவிலில், திருப்பணி செய்ய, 14வது நிதி ஆணையம் மூலம் நிதி கிடைத்தும், புனரமைப்பு பணி துவங்காமல் உள்ளது. எனவே, விரைவில், திருப்பணி நடத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.