பி.ஆர்க். படிப்பு: விண்ணப்பிக்க நாளை கடைசி

download

ஐந்தாண்டு பி.ஆர்க். (இளநிலை -கட்டடக் கலை) படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் சனிக்கிழமையோடு (ஜூன் 27) முடிவடைகிறது.

 இதற்கு மாணவர்கள் முதலில் இணையவழியில் பதிவு செய்து, பின்னர் நிறைவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

 அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான பி.ஆர்க். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

 2015-16 கல்வியாண்டுக்கான பி.ஆர்க். சேர்க்கைக்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கட்டடவியல் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் தேசிய கட்டடவியல் திறனறித் தேர்வு 2015-இல் தகுதி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

 விருப்பமுள்ள மாணவர்கள் www.annauniv.edu/tnea2015 என்ற இணையதளம் மூலம் சனிக்கிழமை (ஜூன் 27) மாலை 5.30 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பதுடன், அன்றைய தினம் மாலை 6 மணிக்குள் இணையத்தில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு, தேசிய திறனறித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், அதற்கான தேர்வறை நுழைவுச் சீட்டு உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றிட்டு இணைக்க வேண்டும்.

 அதனுடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையையும் இணைக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500, எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு ரூ. 250 ஆகும்.

 இந்த இணைப்புகளுடன் கூடிய நிறைவு செய்த விண்ணப்பத்தை “ஏ-4′ அளவிலான உறையிலிட்டு “செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 025′ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 மேலும் விவரங்களுக்கு 044 – 2235 8265, 2235 8266, 2235 8267 ஆகிய தொலைபேசி எண்களை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply