பி.எட். சேர்க்கை: அக்.14 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

mbbs_counselling2

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.

கலந்தாய்வு முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.

முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடத்தப்பட்டது.

இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறியது:

கலந்தாய்வு முடிவில் 1,000 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. மீதமுள்ள 777 இடங்களுக்கு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1,600 பேர் வரை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

குறைந்தது சேர்க்கை: கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, நிகழாண்டில் பி.எட். மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக 300 முதல் 400 இடங்கள் வரை மட்டுமே காலியாக இருக்கும்.

 ஆனால், நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதே அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகளிலும் சேர்க்கை குறைந்திருப்பதற்கான முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

Leave a Reply