‘பாகுபலி’ 2ஆம் பாகத்தின் தமிழக உரிமை ரூ.40 கோடி?
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான பாகுபலி’ திரைப்படம் உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டு ரூ.500 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ‘பாகுபலி 2’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடிப்பில் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான படம் ‘பாகுபலி’. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் ‘பாகுபலி 2’ படத்துக்கான படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது . இன்னும் படப்பிடிப்பே துவங்கப்படாத நிலையில் 2ஆம் பாகத்துக்கு, தற்போதே விநியோகஸ்தர்கள் மத்தியில் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. ‘பாகுபலி’ முதல் பாகத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சுமார் 12 கோடிக்கு கைப்பற்றிய நிலையில் இரண்டாம் பாகத்திற்கு ரூ.40 கோடி வரை தருவதற்கு முன்னணி நிறுவனங்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.