ஷங்கர் இயக்கிய நண்பன்’ படத்தில் நடிகை அனுயா ஒரு இக்கட்டான சூழலில் பிரசவ வலியில் துடிக்கும்போது, மருத்துவ கல்லூரி மாணவியான இலியானா கணினி இணைய இணைப்பின் மூலம் ‘லைவ்’ ஆக பிரசவ வழிமுறைகள் குறித்து சொல்ல, அதைப் பின்பற்றி அனுயாவுக்கு விஜய் பிரசவம் பார்ப்பார். சினிமாவில் நாம் கைதட்டி ரசித்த காட்சி, நிஜத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது.
நியூஜெர்ஸியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ரிவேரா, அந்த மாதத்திற்கான பரிசோதனைக்காக தான் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றார்.
ஆனால் அந்நேரம் ரிவேராவின் டாக்டர் மேனா டெவல்லா வேறொரு மருத்துவமனையில் இருக்க, எதிர்பாராத விதமாக ரிவேராவுக்கு பனிக்குடம் உடைந்தது. வலியில் துடிக்க ஆரம்பித்தார். மருத்துவமனையில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்திருந்த மெடிக்கல் அசிஸ்டன்ட் ஆஸ்வைடா டாரஸ், இதற்கு முன் தனியாகப் பிரசவம் பார்த்த அனுபவம் இல்லாதவர்.
பதறிய அவர், மருத்துவர் மேனாவுக்கு விஷயத்தைத் தெரிவிக்க, அவரோ உடனடியாக வரமுடியாத சூழலில் சிக்கியிருந்தார். ரிவேராவின் வலியும் கதறலும் அதிகரிக்க, டாக்டரும் மெடிக்கல் அசிஸ்டன்ட்டும் செய்வதறியாமல் தவிக்க, சட்டென ஒரு ஐடியா கிளிக் ஆனது ரிவேராவின் கணவருக்கு.
ஆம்! ரிவேராவின் கணவர் தன் ஐ-போனில் உள்ள ‘ஃபேஸ்டைம்’ வீடியோ மெசேஜிங் ஆப் மூலமாக பிரசவ அறையில் இருக்கும் ரிவேராவை டாக்டர் பார்க்கச் செய்ய, சுகப் பிரசவத்திற்கு செய்ய வேண்டியவற்றை டாக்டர் ஐ-போன் மூலமாக மெடிக்கல் அசிஸ் டென்ட்டுக்கு அறிவுறித்துக்கொண்டே இருக்க, இந்த முயற்சி சாத்தியமாகுமா என்று ரிவேராவுக்கு வலியுடன் சேர்ந்து பயமும் பிடித்துகொண்டது.
கிட்டத்தட்ட 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு ரிவேராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
‘ஏதாவது செய்தாக வேண்டும் என்ற இக்கட்டுச் சூழலில் என் மூளையில் சட்டென வெட்டியது, இந்த ஐ-போன் ஐடியா.’ பரவசமாகிறார் ரிவேராவின் கணவர். ‘யோசிக்க நேரமில்லாத சூழலில், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீடியோ மெசேஜிங் மூலமாக என் மெடிக்கல் அசிஸ்டன்ட்டுக்கு கைடு செய்தேன். இது எனக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஆச்சர்யமான அனுபவம்!’ கண்களை அகல விரித்து திகைப்பு மேலிட சொல்கிறார், மருத்துவர் மேனா.
‘இவ்வளவு பிராக்டிக்கலாக, பொறுப்பாக மருத்துவப் பாடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது!’- பெருமூச்சு விடுகிறார் மெடிக்கல் அசிஸ்டன்ட் டாரஸ்.
ஓயாத ‘குவா குவா!’ சத்தத்துடன் ‘நன்றி டெக்னாலஜி!’ என்று சொல்கிறதோ குழந்தை?!