ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் ரயிலில் டாய்லெட்டில் ஒரு பெண் குழந்தை பெற்றதாகவும், ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை டாய்லெட்டின் ஓட்டை வழியாக கீழே விழுந்துவிட்டதாகவும் ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ராஜஸ்தானில் உள்ள மானு என்ற பெண் தனது கணவர் மற்றும் தாயாருடன் சூரத்கார் என்ற நகரில் இருந்து ஹனுமான்கார் என்ற இடத்திற்கு பார்மர் கல்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மானு டாய்லெட் சென்றபோது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. டாய்லெட்டில் பிரசவ வலியால் துடித்த அவருக்கு அங்கேயே குழந்தை பிறந்ததாகவும், பிறந்த குழந்தை டாய்லெட்டின் ஓட்டை வழியே கீழே விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மானுவின் அலறல் சத்தத்தை கேட்ட அவரது கணவர் உடனடியாக டாய்லெட் கதவை உடைத்து பார்த்தபோது மானு சுயநினைவின்றி டாய்லெட்டில் விழுந்து கிடந்தார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே டிராக்கில் பார்த்தபோது ரத்தக்கறையுடன் தண்டவாளத்தில் குழந்தை அழுதுகொண்டிருந்ததை பார்த்து அனைவரும் திடுக்கிட்டனர். உடனடியாக தாயும் குழந்தையும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.