பாகமதி: திரைவிமர்சனம்

பாகமதி: திரைவிமர்சனம்

ஊழல் செய்யாத நல்ல அரசியல்வாதியான மத்திய அமைச்சர் ஜெயராம் மீது அவரது கட்சியினர்களே பழிபோட முடிவு செய்து, சிலைக்கடத்தல் வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக நம்ப வைக்க சிபிஐ அதிகாரி ஆஷா சரத்தை நியமிக்கின்றனர். இதற்காக ஜெயராமின் தனிச்செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான அனுஷ்காவை சிறையில் இருந்து வெளியே எடுத்து பாகமதி பங்களாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்கின்றனர். அப்போது அந்த பங்களாவில் ஒருசில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. எவ்வளவு முயன்றும் அனுஷ்காவிடம் இருந்து தேவையான தகவல் இல்லை என்பதால் அனுஷ்காவை பாகமதி பங்களாவில் இருந்து மனநல மருத்துவமனைக்கு மாற்றுகின்றனர். இதன்பின் நடைபெறும் திடுக்கிடும் திருப்பமும், ஒவ்வொரு கேரக்டரும் உண்மையில் யார் என்பதற்கன விடையும் தான் இந்த படத்தின் இரண்டாம் பாதி. இந்த படத்தின் இரண்டாம் பாதியின் ஒரு காட்சியை கூறிவிட்டால் கூட சுவாரய்ஸ்யம் போய்விடும்

ஐஏஎஸ் அதிகாரி, பாகமதி என இரண்டு கேரக்டர்களுக்கு மிகச்சரியாக பொருந்துகிறார் அனுஷ்கா. கிட்டத்தட்ட படம் முழுக்க அவருடைய ராஜ்ஜியம் தான். மக்களுக்கு நல்லது செய்யும் ஐஏஎஸ் அதிகாரி, பாகமதி பங்களாவில் பேய் இல்லை என்ற கொள்கையுடன் தைரியமாக நுழைவது, பாகமதி கேரக்டரில் ஆவேசம் அடைவது, பின்னர் ஜெயராமுக்கு சவால் விடுப்பது என அனுஷ்காவின் முழுமையான திறமை பளிச்சிடுகிறது.

சிபிஐ அதிகாரியான ஆஷா சரத், அனுஷ்காவின் காதலராக நடித்திருக்கும் உன்னிமுகுந்தன் , அரசியல்வாதி கேரக்டரில் ஜெயராம், காவல்துறை அதிகாரி கேரக்டரில் முரளிஷர்மா, டாக்டர் கேரக்டரில் தலைவாசல்அ, பெண்போலீஸ் கேரக்டரில் வித்யூலேகா ஆகியோர் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.

தமன் இசையில் பின்னணி இசை அருமை. வெங்கடேஸ்வரராவின் கச்சிதமான எடிட்டிங், மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். இயக்குனர் அசோக், முதல் பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பல படங்களில் பார்த்த பேய்க்காட்சிகள் சலிப்பை தருகிறது. அமானுஷ்யங்கள் அனைத்தும் காரணமான அனுஷ்கா, தனி ஆளாக எப்படி இவ்வளவையும் செய்ய முடியும் என்ற லாஜிக் இடிக்கின்றது. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகம், திடுக்கிடும் திருப்பங்கள், சரியான கிளைமாக்ஸ் என அசத்துகிறார் இயக்குனர்.

மொத்தத்தில் அனுஷ்காவின் நடிப்பு, இரண்டாம் பாதியின் விறுவிறுப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்.

Rating: 3/5

Leave a Reply