சீன மொழியில் ரிலீஸ் ஆகும் 3வது இந்திய படம் ‘பாகுபலி’
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்க்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது இந்த படம் சீன மொழியில் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் சீன டப்பிங் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. எனவே பாகுபலி திரைப்படம் விரைவில் சீனாவில் சுமார் 6,0000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
ஏற்கனவே அமீர்கானின் ‘பிகே’ மற்றும் ‘3 இடியட்ஸ்’ ஆகிய இரண்டு இந்திய படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது பாகுபலியும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘E Star Films’ என்ற நிறுவனம் இந்த படத்தின் சீன ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாகவும், இந்த படத்தை சீனா முழுவதும் பிரமாண்டமாக ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக சீனத்தலைநகர் பீஜிங் உள்பட சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகள் புக் செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வருடம் மே மாதம் இந்த படம் சீனாவில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.